சனி, 26 டிசம்பர், 2009

நீங்களும் சொல்லுங்கள்......

இப்போதெல்லாம் அதிகமாக பதிவு எழுத வேண்டும் என அவாக் கொள்கிறேன். (வேலைகள் எதுவும் இல்லாததினாலோ?... பாவம் நிறுவன முகாமையாளர்...) ஆனால் வித்தியாசமாக எழுத வேண்டும் என்கிற ஒரு ஆசை எல்லோரையும் போல் எனக்கும் இருக்கிறது. அதனால் தான் என் தளத்திற்கு வந்து என் ஆக்கங்களை வாசித்து விட்டு கருத்துக்கள் சொல்லும் நண்பர்களாகிய உங்களிடம் இந்த புதிய முயற்சிக்கு கருத்துக் கேட்கலாம் என நினைத்து இந்தப் பதிவை எழுதிகிறேன்.இப்போதெல்லாம் ஊடகங்களின் பெருக்கம் அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக வானொலி, தொலைகாட்சி சேவைகள். இந்த ஊடகங்களில் கடமையாற்றும் ஒலி/ ஒளிபரப்பாளர்களின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருப்பவர்கள் அவர்களுடைய நேயர்கள். நேயர்கள் கொடுக்கும் ஆதரவில் தான் அவர்களுடைய வெற்றியோ, நிகழ்ச்சியினுடைய வெற்றியோ தங்கி இருக்கிறது. தன்னுடைய குரல் வளம், தேடலின் வேகம், நிகழ்ச்சியில் புகுத்தும் புதுமைகள் தான் அந்த அறிவிப்பாளரை நேயர்கள் மத்தியில் மிளிரச் செய்கிறது. இப்படிப் பட்ட ஒலி / ஒளிபரப்பாளர்களுக்கு எனது வலைத் தளத்தினூடாக ஊக்கம் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. (நான் அறிவிப்பாளராக இருந்த காலத்தில் எனது நேயர்கள் எனக்கு கொடுத்த ஆர்வம், உற்சாகம் இதற்கு ஒரு சான்று ).

அவர்களது நிகழ்ச்சிகளை வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ, இணையத்திலோ கேட்டு விட்டு அந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு விமர்சனம் எழுதலாம் என எண்ணுகிறேன். (ஒரு காலத்தில் அறிவிப்பாளனாக இருந்த நான் இப்போது கடல் கடந்து இருப்பதால் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் நேயராக மாறி இருக்கிறேன்.) சூரியனின் முகாமையாளர் நவா அண்ணா அவருடைய ஒரு பதிவிலே இலங்கையைப் பொறுத்த வரையில் வானொலி அறிவிப்பாளர்கள் தான் நட்சத்திரங்கள் எனக் கூறி இருக்கிறார். எனவே சினிமாவைப் பார்த்து அந்த நட்சத்திரங்களையும், அவர்கள் படங்களை விமர்சிப்பதிலும் முந்தியடிக்கும் நாம் எமது நட்சத்திரங்களையும், அவர்களது நிகழ்ச்சிகளை விமர்சிப்பதிலும் ஏன் பின் நிற்கிறோம் என எண்ணிக் கொண்டு தான் இப்படியான ஒரு ஊகத்தை எடுத்திருக்கிறேன். நிச்சயம் இது அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு ஒரு நல்ல விமர்சனமாக இருக்கும். (அவரை எந்த வகையிலும் புண் படுத்துவது இதன் நோக்கமாக இருக்காது. மாறாக அவரை இன்னும் ஊக்கப் படுத்த வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்காக இருக்கும்... இதன் மூலம் வானொலி நிகழ்ச்சிகள் சில வேளை வெற்றி நடை போடலாம். இப்போதும் ஒரு சில நிகழ்ச்சிகள் வெற்றி நடை போடுகிறதை மறுக்க முடியாது. )

வலைத் தளத்தைப் பொறுத்த வரை இங்கே ஏராளமான ஒலி / ஒளிபரப்பாளர்கள் வெற்றி நடை போடுகின்றார்கள். அவர்கள் வழி தவறியேனும் என் தளத்திற்கு வர வாய்ப்புக் கிடைத்தால் சில வேளை அவர்களது நிகழ்ச்சி பற்றிய விமர்சனம் அவர்களது கண்ணுக்கு கிட்டலாம். எனவே இதன் மூலம் யாரோ ஒருவர் நம் நிகழ்ச்சியை அவதானித்துக் கொண்டிருக்கிறார் (விமர்சனத்துக்காக ) என்கிற சந்தோசம் பிறக்கும் இல்லையா?..... எனவே அவருக்கு இருக்கிற ஊக்கம், நம்பிக்கையை விட இன்னும் அதிகமாக சந்தோசம், தன்னம்பிக்கை பிரக்குமில்லையா? (இது என்னோட தனிப்பட்ட எண்ணம் மாத்திரமே....). எனவே தான் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.

இனி நீங்கள் தான் சொல்ல வேண்டும். நான் எடுத்து இருக்கும் இந்த புதிய முயற்சியை நீங்கள் வரவேற்கிறீர்களா? இப்படியான விமர்சனங்களை நீங்கள் எதிர் பார்க்குறீர்களா? உங்களுடைய எதிர் பார்ப்பையும், கருத்துக்களையும் பொறுத்துத் தான் தொடர்ந்து இந்த ஆக்கத்தினை எழுதுவதா? இல்லையா என முடிவு செய்யலாம் என்று இருக்கிறேன். எனவே பின்னூட்டல் மூல உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்.

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.....
அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்!.....

அப்போ நான் வரட்டா

உங்கள் நண்பன்

அபூ..........

புதன், 23 டிசம்பர், 2009

கலைஞர் டிவியும், கிக்கான அரிசிக் கஞ்சியும்.....

இப்போதெல்லாம் அதிகமாக இணையத்தில் உலா வரக் கிடைப்பதில்லை. அலுவலகத்தில் இருக்கின்ற அதிகமான வேலைகள் தான் இதற்கு காரணம் எனச் சொன்னால் கூட தப்பில்லை. அந்த அளவு தலைக்கு மேல் வேலை. என்ன செய்ய? கிடைக்கின்ற சின்ன இடை வெளியில் எங்காவது ஒரு சில பக்கங்களை நுனிப்புல் மேய்வது, அப்படியே அடிக்கடி முகப் புத்தகம் சென்று நண்பர்களின் முகங்களைப் பார்த்துக் கொள்வது என்று காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வேலைப் பளுவெல்லாம் இந்த December முடியும் வரை தான். அதன் பிறகு ஐயா இணையத்திலே தான் இருப்பார். (அப்போ வேலை வெட்டி இல்லாதவன் தான் என்று யாரோ பேசிக்கிறாங்க............. இருக்கலாம்.....)

அலுவலகத்தில் வேலை முடித்து room போனால் ஒரு சின்ன மகிழ்ச்சி கிட்டுவதற்காய் தொலைக் காட்சி பார்ப்பது எனக்கு மட்டுமல்ல, எம் எல்லோருக்குமே பழக்கமாய் மாறி விட்டது. ஆனால் அதே தொலைக் காட்சிகள் தொல்லைக் காட்சிகளாக மாறியிருப்பது தான் மிகப் பெரிய கவலையாக இருக்கின்றது. நேற்று கொஞ்சம் ஓய்வாக இருந்ததாலும், உடலுக்கு கொஞ்சம் சோர்வாக இருந்ததாலும் கூடுதலான நேரம் தொலைக் காட்சியில் பொழுதை போக்க வேண்டி நேர்ந்தது. (யார் செய்த கொடுமையோ?....) அதுவும் கலைஞர், இசைஅருவி, கலைஞர் சிரிப்பொலி என ஐயாவுக்கு சொந்தமான (அதாங்க நம்ம அண்ணன் ) channelகளையே மாற்றி மாற்றி பார்க்க வேண்டி நேர்ந்தது. (இவைகள் தான் இலவச ஒளிபரப்பை வழங்குவதாலோ?.... ஹி....ஹி....) என்ன கொடும சரவணா?....... சினிமாவில் பாடலுக்கா பஞ்சம்?... அதுவும் சினிமாவுக்கே (குறிப்பா கலைக்கே ) பெயர் பெற்ற இந்தியாவிலா? ஒளிபரப்பாக்கப் பட்ட பாடல்கையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பாக்குவதில் அப்படி என்ன திருப்தி அவர்களுக்கு?...


கலைஞர் TV பக்கம் சென்றால் அவர்களுக்கே உரித்தானது போல் சில பாடல்கள். (பாடலைப் பட்டயடிப்பது தான் இவர்களது நோக்கமோ?...ஆதவன் பாடலையும், கந்தக் கோட்டை, யோகி, ரேணிகுண்டா பாடல்கள் இப்போது களத்தில்.....) அந்தப் பாடல்களையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பாக்கி இரத்த அழுத்தத்தை கூட்டுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. (என்ன மாதிரி tension கொடுக்குறாங்க தெரியுமா?.... ) சரி பார்த்துப் பார்த்து பழகிப் போனதால் பெரிசாக அலட்டிக் கொள்ளாமல் சிரிப்பொலி போனால் அங்கேயும் அதே விளையாட்டு..... (ஒரே காமடியாவே இருக்கு.... வெவ்வேறு படங்களிலிருந்து காட்சிகள் ஒளிபரப்பினால் ஒரே சபாஷாக இருக்கும்.......) பின்னால் இசையருவி போனால் அங்கேயும் அதே திருவிளையாடல். (இவர்கள் தான் கலைஞர்கள்..... நான் சொல்லலீங்க.....) எத்தனையோ கலைஞர்கள் இந்தியாவிலே இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய்யவே சந்தர்ப்பம் கொடுக்கலாம் இந்த தொலைக் காட்சிகளிலே. ஆனால் ஒரு சிலருக்குத் தான் அதில் நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது. நல்ல உதாரணம் தான் கலைஞர் டிவி, சிரிப்பொலி மற்றும் இசையருவி அத்தனை அலைகளிலும் ஒளிபரப்பாக்கப் படும் விளம்பரங்களிலும் குரல் கொடுக்கும் அந்த மன்மதக் குரலாளன். தனக்கே சொந்தமான தாய் மொழியை எவ்வளவு கஷ்டப்பட்டு உச்சரிக்கிறார் என்பதை பார்க்கும் பொது தான் அந்த குரல் மீது அளவு கடந்த பரிதாபம் ஏற்படுகிறது. (ஒவ்வொரு விளம்பரத்துக்கும் பின்னால் நிச்சயம் அவர் ஒரு முட்டையாவது குடிக்க வேண்டும். ...... அப்படி கஷ்டப் பட்ராருங்க தமிழ் உச்சரிப்புக்கு......பாவம் சாமி....) ஏன் அவரை மட்டும் வைத்துக் கொண்டு ஒலிப்பதிவு செய்கிறது இந்த கலைஞர் குடும்பம் (ஒரு வேளை சொந்தக் காரராக இருப்பாரோ?....) பாவம்....... அந்த குரலுக்குரியவர். (அவருடைய பெயர் தான் தெரியல....... தெரிந்தும் என்ன தான் செய்ய?.... என்னைப் பொறுத்த வரை அவர் அவ்வளவு பெரிய கலைஞன் அல்ல...)

அதே நேரம் சில நல்ல நிகழ்ச்சிகளையும் கலைஞர் டிவி ஒளிபரப்பாக்குகின்றது. மானாட மயிலாட... (நிறையப் பொண்ணுக ஆடுரதால.....), விசாரணை, வானம் பாடி, இப்படி ஒரு சில நிகழ்ச்சிகள் பார்க்கக் கூடிய முறையில் ஒளிபரப்பாகப் படுகின்றது. அதற்கு சின்னதா ஒரு சபாஷ் போடலாம். அவ்வளவு தான். இன்னுமொரு முக்கியமான விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். SS Music எதேர்ச்சையாக நேற்று கூடுதலான நேரம் பார்வையிட நேர்ந்தது. ஒரு பெண் தொகுப்பாளறது Just Connect என்கிற நிகழ்ச்சியை கிட்டத் தட்ட ஒரு மணித்தியாலம் வரை பார்க்க கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எனக்குப் பிடித்த ஒரு விடயத்தை பற்றி நேற்றைய நிகழ்ச்சியில் அந்த தொகுப்பாளினி ரொம்ப நன்றாகப் பேசியிருந்தார். அதாவது வாசிப்புத் தான் கருப்பொருள். பிடித்த எழுத்தாளர், வாசித்த புத்தகம் என்று சொல்லி நிறையவே ரசிகர்களோடு பேசினார். (இனி அதில் என்ன? எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே அது?.... ன்னு யாரோ சொல்றாங்க.....) இதில் முக்கியமான விடயம் அந்த தொகுப்பாளினி அழகான முறையில், சரளமாக ஆங்கில மொழியில் தொகுப்பை செய்தது தான். நிகழ்ச்சி முழுக்க ஆங்கில மொழியிலே தான் இடம் பெற்றது. ஆனால் ஒளிபரப்பாக்கப் பட்ட பாடல்கள் அத்தனையும் தமிழ் பாடல்கள். (தொகுப்பாளினிக்கு நிச்சயம் எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய சபாஷ் கொடுக்கத் தான் வேண்டும்....) சிறப்பாக இருந்தது அந்த நிகழ்ச்சி. நிச்சயமாக அந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு பெரிய திருப்பம் கொடுத்தது. (ஆங்கிலமா? உனக்கு ஆங்கிலம் தெரியாம எப்படி ஆங்கில நிகழ்ச்சின்னு என் நண்பர் ஒருவர் பக்கத்துல இருந்து அலட்டிக் கொல்றாரு.... நான் இப்போ சரளமாக ஆங்கிலம் பேசுவதை அறியாமல்..... ஒரே காமடியாகவே இருக்குது இல்லையா?....)

சரி, என்ன தலைப்புக் கேற்ற விடயம் இன்னும் வரவில்லைன்னு யாரோ பேசிக்கிறாங்க. இதோ வந்துட்டேங்க.. கலைஞர் TV கொடுத்த சோர்வு, சவூதியின் குளிர் கொடுத்த கொடுமை அந்த மாலைப் பொழுதில் ஒரு கஞ்சி குடித்தால் நல்ல ஒரு உற்சாகத்தை உடம்புக்குக் கொடுக்கும் என தோன்றியது. எழும்பி ஒரு கஞ்சி கோப்பை தான் குடித்தேங்க.... (சத்தியமா ஒரு கோப்பை தாங்க.....) என்னமா உற்சாகம்.?...... அந்த உற்சாம் தான் இன்று காலை 8 மணியில் இருந்து இது வரை இந்த ஆக்கத்தை type பண்ண உதவியது. (அப்போ எவ்வளவு உற்சாகம் இந்த அரிசிக் கஞ்சி கொடுத்திருக்கும்னு பாருங்க......... ) அப்ப பாருங்களே இவர் கலைஞர் டிவி பார்த்துட்டு கஞ்சி குடித்திருக்கிறார். ஹி..... ஹி....... (யாருமே பண்ணாத ஒரு வேலையைப் பண்ணிருக்கிறார்.....) - கொஞ்சம் சிரிப்பீங்க என்ற நம்பிக்கைல தான் இந்தப் பந்தி.... அப்போ சிரிங்க..... நன் போயிட்டு வாறன்...

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்...... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்.....

அப்போ நான் வரட்டா

உங்கள் நண்பன்

அபூ......

சனி, 12 டிசம்பர், 2009

வானொலிக் கலை....
நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் பதிவுலகில் உங்களோடு இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி.... தொடரும் மகிழ்ச்சியோடு தலைப்புக்கு வருகிறேன்.

அன்றாட தொழில் எதுவோ அது வீணாக்கப் படாமல் ஒரு துணையாக, தொழிலுக்கு ஊக்கம் அளித்துக் கொண்டிருப்பது வானொலி எனும் ஊடகமே ஆகும். உலகின் எந்த நாட்டுக்கும், எது வித அனுமதியுமின்றி, யாவருடைய இல்லங்களுக்கும் தங்கு தடையின்றி நுழைந்து கதிரை போட்டு அமர்ந்து கொள்வது இந்த வானொலி என்கிற ஊடகமாகும். நவநாகரீக கணணி யுகத்தில் தன்னிலை குன்றாது தலை நிமிர்ந்து இந்தளவுக்கு உயிரோட்டம் பெறுகிறதென்றால் அந்த ஊடக அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் புகுத்தும் புதுமைகள் தான் காரணம் எனலாம். (உதாரணத்துக்கு இன்றைய காலத்தில் நம்ம பதிவுலக ஜாம்பவன்களின் நிகழ்ச்சிகளே போதும்... லோஷன் அண்ணாவின் விடியல், ஹிஷாமின் கற்றது கையளவு, சந்துருவின் எங்கேயும் எப்போதும்......... அப்படியே நீள்கிறது பட்டியல்.......)

வானொலி ஒலிபரப்பு என்பது அறிவியலின் அடிப்படையில் தோன்றிய ஒப்பற்ற கலையாகும். அது சரி, ஏன் இவன் இன்னக்கி வானொலி பற்றியே பேசிட்டு போறான்? இவனுக்கு ஏதாவது நடந்து விட்டதோ என நீங்கள் எனக்காக ஏங்குவதும் எனக்கு விளங்காமலில்லை. என்ன செய்ய? சொல்ல வேண்டிய நிற்பந்த நிலை. சொல்லித் தான் ஆக வேண்டும். அதனால் சொல்கிறேன்.

ஒலிபரப்புக் கலை குறித்து பல ஆண்டுகளுக்கு முன் சோ. சிவபாத சுந்தரம் எழுதிய நூல் பற்றி நான் சில தகவல்கள் கேள்விப் பட்டிருக்கிறேன். (அந்த நூலை தேடி படிக்க வேண்டும் என ஆசைப் பட்டேன். ஆனால் அது இதுவரையில் என் பார்வைக்கு அந்த நூல் எட்டவில்லை.) அதன் பின்னால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் "வானொலிக் கலை " என்கிற அறிவிப்பாளர்களுக்கு மிகவும் பிரயோசனம் மிக்க ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றார் இலங்கை வானொலியின் பயிற்ச்சிப் பட்டறையில் உருவான விமல் சொக்கநாதன் அவர்கள். (அதை எல்லாம் ஏன் இங்க எழுதுராய்னு நீங்க கேட்பது விளங்குது. )2007 ம் ஆண்டு காலப் பகுதியிலே தான் இந்த நூல் பற்றி நான் அறிந்தேன். அன்றிலிருந்து இன்று வரை அந்தப் புத்தகத்தை பல புத்தகசாலை சென்று தேடி இருக்கிறேன். இது வரையில் என் கைக்கு அந்த நூல் கிட்டவில்லை. (இனி நாங்க என்ன பண்ணவான்னு நீங்க முறைக்கிறீங்க......) அப்படி இருக்கையில் இன்றைய பதிவாய் இந்த விடயத்தை நான் பதிவிடுகிறேன் என்றால் ஒரு காரணமும் இல்லாமல்இல்லை.

வானொலி அறிவிப்புத் துறையை காதல் கொள்ளும் நான் (சில காலங்கள் அந்தக் காதலிக்கு காதலனாய் இருந்ததில் அளவில்லா ஆனந்தம் ஒரு பக்கம் இருக்கத் தான் செய்கிறது.....) எப்படியாவது இந்த நூலைப் பெற வேண்டும் என ஆசை கொண்டு இலங்கையின் பல புத்தக சாலையில் இந்தப் புத்தகத்தை நான் கடல் கடந்து வருவதற்கு முதல் தேடி அலைந்தேன். ஆனால் கடைசி வரை அது என் கண்ணுக்குத் தெரியவுமில்லை. கைக்கு கிட்டவுமில்லை. (கைக்கு கிட்டலன்னா கிட்டியதக் கொண்டு வேலையைப் பாருன்னு யாரோ சொல்றாங்க போல....)

அந்த நூல் பற்றி இன்றைய தினம் பதிவிட முக்கிய காரணம் "வானொலிக் கலை " என்கிற இந்த நூலை இந்தியாவில் மிக இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம் என நான் கேள்விப் பட்டிருக்கிறேன். எனவே தான் இன்றைய பதிவில் இது பற்றி பதிவிடுகிறேன். என் பதிவுக்கு ஏராளமான இந்திய சொந்தங்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் நிச்சயம் இந்த உதவியைப் பண்ணுவார்கள் எனும் நம்பிக்கையில் தான் இந்தப் பதிவை இடுகிறேன். (எந்த நாட்டில் கிடைத்தாலும் பரவா இல்லை...)

நூல் : வானொலிக் கலை
ஆசிரியர் : விமல் சொக்கநாதன்
விலை : 125 இந்தியா ரூபா..

என் வலையுலக நண்பர்கள் (குறிப்பாக இந்திய சொந்தங்கள் ) எப்படியாவது இந்த நூலை தேடித் பெற்று என் கரம் சேர்க்க முயற்சி பண்ணுவீர்களா? அந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் அந்த நூலுக்கான பெறுமதியினை நான் உங்களுக்காக வழங்கக் காத்திருக்கிறேன். (அட, இப்படியுமா??? என நீங்கள் யோசிக்க வேண்டாம். இந்த நூலைத் தேடி நான் அலையாத இடமில்லை. ஆனால் எப்படியாவது இந்த நூலைப் படிக்க வேண்டும் என்கிற ஓர் ஆர்வம் என்னிடம் இருக்கிறது.) அதனால் தான் என் நண்பர்கள் உங்களிடம் சொல்லி இருக்கிறேன். முடியுமானால் முயற்சி பண்ணிப் பாருங்கள்...... புத்தகம் கிடைத்தால் பின்னூட்டத்தில் எழுதுங்கள். அதற்கான வெகுமதியைத் தந்து விட்டு உங்களிடமிருந்து நான் அந்த நூலைப் பெற்றுக் கொள்கிறேன்.

எதிர் பார்ப்போடு................................

மற்றுமொரு பதிவில் சந்திப்போம் .... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்....

அப்போ நான் வரட்டா....

உங்கள் நண்பன்

அபூ.......

செவ்வாய், 6 அக்டோபர், 2009

ஆசான்....இன்றைய தினம் சர்வதேச ரீதியில் ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது. இந்த ஆசான்களை கெளரவிக்க, மரியாதை செய்ய, நினைவு படுத்த தனியாக ஒரு நாள் தேவை இல்லை. இருந்தாலும் அவர்களுக்காக ஒதுக்கிய நாள் என்பதால் ஆசான்களுக்காக வடித்த ஒரு கவிதையை இன்றைய பதிவில் பதிவிடுகிறேன்.

ஆனால் இன்றைய தினம் என் பாடசாலை வாழ்வில் கழித்த ஆசிரியர் தின நாட்களும், கடந்த வருடம் வசந்தம் வானொலியில் ஆசிரியர் தினத்தன்று செய்த நிகழ்ச்சியும் என்னோடு தனியாக கதை பேசிக் கொண்டிருக்கிறது.

சரி வாங்க கவிதையை பார்ப்போம்....ஆறு வயதில் அறிவைத் தேடி
அனுமதி பெறுகையில்
ஒரு ஆசானாய்க் கண்டேன் உன்னை!...

அன்பால் அரவணைத்து
அகமகிழ வார்த்தைகள் சொல்லி
அனுதினமும் மகிழ வைத்தாய் என்னை!...

கேள்விகள் பல கேட்டு
கேடயங்கள் பல கொடுத்து
கேலிகூத்திலிரிந்து
விளக்கி வைத்தாய் என்னை!....

பரீட்சைகள் பலதில்
பார்போற்ற புள்ளிகள்
படைக்க வைத்தாய்!....

களைகள் என்னில் பிடுங்கி
கலைஞனாய் என்னை வளர வைத்த
கல்விமான் நீ!....

எட்டாத காய் பார்த்து
எண்ணங்கள் வளர்க்காதே
என்ற பொன்மொழி தந்தவன் நீ!...

விடியும் விடியல்களை
விருட்சங்களாய் மாற்றியன் நீ!....

என் கவி வரிகளுக்கு
என்றுமே கருப்பொருள் நீ!....

நான் விழுமியம் பெற
விழித்திருந்த ஆசானே!....
காலமெல்லாம் உன் சேவை
இறை ஆசியுடன் தொடர
காளை இவனின் வாழ்த்துக்கள்!.....

(2005 ஆம் ஆண்டு இதே நாள் என் பாடசாலை வாழ்வின் விடுகை வருட கடைசி ஆசிரியர் தின நிகழ்ச்சியை ரொம்ப விமர்சையாக நடத்தினோம். காலை 9 மணி தொடக்கம் 3 மணி வரை நிகழ்ச்சி சிறப்பாய் நடந்தேறியது. விசேடமாக எல்லா ஆசிரியர்களையும் மேடை ஏற வைத்தது, பாடல் பாட வைத்தது, நடனம் ஆட வைத்தது, அவர்களுடைய பழைய நாள் நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்தது, முக்கியமா பாடசாலை அதிபரை மேடை ஏற்றி அவரை கேட்காத கேள்விகள் பல கேட்டு அவரை கொஞ்சம் வேருப்பூட்டினாலும், ரொம்ப சந்தோஷப் படுத்தியதுன்னு சொல்லி வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கியதை இரவு என் பாடசாலை நண்பி ஒருத்தி தொலைபேசியினூடாக நினைவு படுத்தியிருந்தாள்.....)

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்
அபூ.....

திங்கள், 5 அக்டோபர், 2009

மீண்டும் ஒரு வசந்தம்....
ஹே!... எல்லோரும் எப்படி இருக்கீங்க?... நல்லா இருக்கீங்களா?... நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பதிவுலகுக்கு அறிமுகமாகிறேன்.

புனித ரமலான் மாதம் என்பதால் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் பதிவுலகுப் பக்கமே வரக் கிடைக்கவில்லை. அது போல் எந்தப் பதிவுக்கும் பின்னூட்டமும் இடக் கிடைக்கவில்லை. இனி தொடர்கிறேன் பதிவுலகோடு என் வாழ்க்கையை. இருந்தாலும் அலுவலக வேலைகளுக்கு மத்தியில் புகுந்து விளையாடுவது கஷ்டமாக இருந்தாலும் நம்பிக்கையோடு மீண்டும் பதிவெழுத ஆரம்பிக்கிறேன்.

இதுவரை காலமும் என் தளத்திற்கு வந்து பின்னூட்டல் இட்டு என் எழுத்துத் துறையை வளர்க்க ஆர்வம் ஊட்டிய நண்பர்கள் உங்கள் அனைவருக்கும் இதயம் திறந்து நன்றிகள். இனியும் அதே ஆதரவை தருவீர்கள் என எதிர் பார்க்கிறேன்.

பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கும் நன்றிகள்....

இனி வசந்தமான பதிவுகளோடு சந்திப்போம்... அது வரையில் நல்லதையே சிந்திப்போம்.....

அப்போ நான் வரட்டா!......

உங்கள் நண்பன்

அபூ......

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

மன்னிக்க வேண்டுகிறேன்!...

அன்புள்ளங்களே!....

புனித ரமலான் மாதம் என்பதால் அதிகமாக வலைப் பக்கம் வந்து போவதில்லை. அதனால் எந்த வலைத் தளத்திற்கு செல்வதற்கான வாய்ப்பும் கிட்டவில்லை. அலுவலகத்தில் கூட 3 மணித்தியால வேலை என்பதால் அலுவலக வேலையை மாத்திரமே பண்ணிக் கொண்டிருக்கிறேன். மிகுதி நேரத்தில் தொழுகை, குரான், நல்லமல்கள் என இயலுமான அளவு புனித ரமலானின் பயனை அடைந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் உன்னதமான உம்ராக் கடமையை நிறைவு செய்து விட்டு வந்தேன். இன்ஷா அல்லாஹ் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவும் எண்ணம் வைத்துள்ளேன். உங்களது பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புனித ரமலானின் இரண்டாவது பத்தான மஹ்பிரத்துடய பத்தில் இருக்கிறோம். அதிகமாக பிழை பொறுக்கத் தேடுங்கள். கடைசிப் பத்தின் ஒற்றை இரவுகளில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த அந்த லைலதுல் கத்ர் இரவை எதிர் பாருங்கள். முடியுமான வரை இரவு முழுதும் நின்று வணங்குங்கள். ஸகாத், ஸதகா என முடியுமான வரை உதவி பண்ணுங்கள். நிச்சயம் அவைகள் எல்லாம் நிலையான தர்மங்களில் சேரும்.

இன்ஷா அல்லாஹ் ரமலான் முடிந்ததும் மீண்டும் பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன். மீண்டும் சந்திப்போம்... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்....

உயர்ந்த இறைவன் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக!......

இன்றைய தினம் பிறந்த தினத்தைக் கொண்டாடும் அன்பு நண்பன் பிரபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... (விழியும் செவியும் = நானும் நீயும்....)

நான் பதிவு எழுத ஆரம்பித்ததும் முதன் முதலாய் பின்னூட்டல் இட்ட மகான் இவர் தானுங்கோ....

So நீடூழி காலம் 16 ம் பெற்று வாழ்க நண்பரே......

உங்கள் நண்பன்

அபூ.....

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

அகர வரிசையில் ஐயாவின் அலசல்கள்...

தொடர் பதிவுக்கு அழைத்த நண்பன் சீமாங்கனிக்கு நன்றிகள்....

அட்டகாசம் பண்ணியது : வசந்தம் வானொலியின் Fun Box நிகழ்ச்சியில் ஒரு அறிவிப்பாளராய்...

ஆள் மாறாட்டம் : இரண்டு காதல் புறாக்கள் காளை இவனை காவு கொள்ளத் துடித்த வேளை ( பெண்களிடம் ஆள் மாறாட்டம் பண்றது ரொம்ப கஷ்டமான வேலைங்க...)

இன்பமான செய்தி : இப்போதைக்கு காதல் எனும் கடலில் மூழ்கி தத்தளிக்க நான் தயாரில்லை. (இது வரை மூழ்கி சேர் பூசிக்கொண்டது போதும். லொள்...)

ஈயென பல்லிளித்து : வேற எப்போ?.. அப்பப்போ அழகான பெண்களைப் பார்த்து. (இதை செய்தால் தான் கையில் கடிகாரமே இல்லாத நான் அடிக்கடி நேரம் கேட்டு அறிந்து கொள்ளலாம். இது எப்புடி?....)

உணர்வுகள் அழுதது : உயர் தரப் பரீட்சை முடிவிலும், வசந்தம் வானொலியின் கடைசி நிகழ்ச்சியிலும் (21 / 11 / 2008 )

ஊணமாய் நின்றது : பழகிய ஒவ்வொரு நண்பனினதும் பிரிவின் போது....

என்ன கற்பனை : பெரிசா எதுவுமே இல்லீங்க.... ஒரு நல்ல அறிவிப்பாளராய் மிளிர்வதைத் தவிர.....

ஏழைகள் பற்றி : வெளியில் ஏழைகளாய் வாழ்ந்தாலும், கோழயாய் வாழ விரும்பாதவர்கள். நல்ல குணாதிசயம் கொண்டவர்கள். (என் பார்வையில்...)

ஐக்கியம் : அது நிச்சயம் என்னை விட நம் நாட்டுக்கு அவசியம்

ஒதுங்கி நின்றது : நண்பனின் காதலியின் குடைக்குள்..... (வேற எதுக்குமில்ல... நண்பனின் அனுமதியோடு மழைக்காக.... அதுவும் நண்பனோடு சேர்ந்து.... )

ஓலையின் கீற்றுக்கள் : பம்பரத்துக்கும், ஊதிக்கும் உயிரை விட்டது... என் கவிதைக்கு துணை நின்றது...

ஒளடதம் : (கொய்யாங்கோ !... கொய்யாங்கோ!.... Moxal Plus - இது அது இல்லீங்கோ!...)

கஃபா : இரண்டு மாதங்களுக்கு முன் தான் தரிசனம்....
(மன்னிக்கவும்... கடைசி ஃ எழுத்தை என்னால் Keyboard ல் தேட முடியவில்லை. தயவு செய்து தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் இடலாம். )

(வாழ்க்கையில நடக்காத, கற்பனையில உள்ள சில விசயங்களை அகர வரிசையில சொன்ன எனக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?... தாரளமா சொல்லுங்க....)

பதிவைத் தொடர நான் அழைக்கும் நல்லுங்கள்...

குறை ஒன்றும் இல்லை...


யோ வாய்ஸ்!..


ஹேமா

பிரபா

யாழினி

ஜலீலா

Mrs. Faizakader

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்

அபூ....

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

தேவை தானா எனக்கு?....

(நீண்ட நாளா ஒரு ஆசை. என்ன தெரியுமா? ஒரு மொக்கை கவிதை எழுத வேண்டும் என்று.... அதனால இன்று முடிவு பண்ணி ஒரு மொக்கை கவிதை எழுதி இருக்கேன். ஆனால் ஒரு வேண்டுகோள். வந்து வாசிக்கும் எல்லோரும் இது மொக்கை கவிதை என்று சொல்லக் கூடாது. ஓரிரண்டு பேராவது கொஞ்சம் நல்லா இருந்ததுன்னு சொன்னீங்க என்றால் தான் எனக்கு கொஞ்சம் மனதுக்குத் திருப்தியா இருக்கும். லொள்.... அப்போ வாங்க வாசிப்போம்....)

விழி மூடி யோசித்தேன்!..
அங்கே சிறகு முளைத்த
சிட்டு அவள்!.....

பேரழகி என்று நான்
அவளைச் சொன்னாள்
நான் என்ன - பெண்கள்
நெஞ்சை கொள்ளை கொள்ளும்
வெள்ளை மாதவனோ?...

வெண்ணிலவு ஜன்னலில் சிரிக்க,
சுடிதார் அணிந்த சொர்க்கமாய்
வெளியே அவள் வந்தால்
என் கண்ணை பிடுங்கிக் கொள்வேனோ நான்?...

நீ முன்னாள் போனால்
நான் பின்னல் வந்து
ஏ! பெண்ணே திரும்பிப் பாரு
என்று சொல்லின்
போடா போடா புண்ணாக்கு
என்று சொல்ல வார்த்தையில்லாமல்
வாடப் போகுது உன் நெஞ்சம்!....

மே மாதத்தில் மேஜரான நீ
ஜூன், ஜூலை மாதத்தில்
ரோஜாப் பூவின் வாசத்தில்
கண்ணாடி பார்க்காமல்
என் முன்னாள் வந்து நின்றால்
ஐயோ அம்மா! என்ற அலறல்
என்னை அறியாமலே
வெளியில் வருமோ?....

நாக்கா, மூக்கா...
கேட்டுக் கேட்டே
நானொரு சிந்து என்று
சொல்லப் போகும் நீ
என்னைப் பார்த்து
போனால் வருவீரோ
என்று கேட்க எத்தனை
நிமிடங்கள் தான் செல்லும்?....

சஹானா சாரலில் நின்று
உன் தலை முடி உதிர்வதை கூட
தாங்க முடியாது தோழா
என்றால் - எந்த தேசத்தில்
நீ பிறந்தாய் என்று
வாய் பிளப்பேனோ நான்?...

அக்கம், பக்கம் யாருமில்லாத
பூலோகம் வேண்டுமென்று
என்னை நீ அழைத்துச் சென்றால்
என் மறு மொழி எல்லாம்
யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை
என்பதாய் தான் இருக்கும்!...

இதெல்லாம் தேவை தானா எனக்கு?

(இப்படி ஒரு டூயட்டா? தயவு செய்து திட்டாதீங்க. பின்னூட்டல் மட்டும் இட்டுட்டுப் போங்க....)

பிறந்த நாள் வாழ்த்து

(இன்றைய தினம் இலங்கையின் ஆரம்ப கால சூரியன் அறிவிப்பாளரும், எம் போன்ற இளைய தலை முறைக்கு ஒரு முன்மாதிரியுமான, வலையுலகிலும் அறிவிப்பாளர்களுக்கு மிகவும் பிரயோசனமான அவரது அனுபவங்களை பதிவாய் இடும் மூத்த அறிவிப்பாளர் ரமணன் அண்ணா பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். அவருக்கு இதயம் திறந்து இன்ப வாழ்த்துக்களை வலையுலக நண்பர்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்வோம். தமிழ் பற்றும், கனீரென்ற குரல் வளமும் மிக்க அவர் நிச்சயம் ஒரு நல்ல அறிவிப்பாளருக்கான சின்னம். அண்ணா.... வாழ்த்துக்கள்.... )

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்

அபூ.....

புதன், 26 ஆகஸ்ட், 2009

நினைவுகள்!....(காதலில் காயம் கண்ட ஒரு கன்னி பெண்ணினது பாழாய் போன நினைவுகள் என் கற்பனையில்.... )

காதலில் தோல்வி இல்லை
காதலிக்க ஆளும் இல்லை!...
காத்திருந்தேன்....
காதல் தேடும் ஒரு காளைக்காய்!....

காலங்கள் செல்ல - என்
கானகத்திலும் காற்றோட்டம்
காவு கொண்டது
காதல் எனும் பெயரால்!....

கார்த்திகை மாதம்,
காலைப் பொழுது,
காதல் தூது - அந்தோ...
காகிதத்தில்!.....

காதலியே!....
கால் கடுக்க காத்திருந்து
காவியம் படைக்க - உன்னை
கரம் பற்றப் போகிறேன்!...
கன்னியே!...
கவிதையாய் பதில் வந்தாலும் சரி,
கண்ணீராய் பதில் வந்தாலும் சரி,
சம்மதம் என்கிற
ஒரு சொல் மட்டும் எனக்கு
சமர்ப்பணமாய் இருக்க வேண்டும்!...
காதலன் வரிகள் அது!....

வெறுமையாய் வெறிச்சோடிய
என் உள்ளம் வெற்றியான பதில்
கொடுத்தது - காதலில்
வெளிச்சம் கிடைக்கும்
எனும் நம்பிக்கையில்!....

காதல் மலர்ந்ததேன்னவோ
சில நாட்கள் தான்!...
கன்னி இவளுக்கோ
ஓராயிரம் வருடங்கள்
காதல் பிறந்தது போல
உள் மனதில் இனம் புரியாத சந்தோசம்!....

ஒன்றுக்குள் ஒன்றான காதல்,
ஒற்றுமையான இரு உள்ளம்,
ஊரே போற்றி நின்றது...
காலம் மாற்றி வைத்தது!....

காதலர் நம் விதியோ?...
கால தேவதன் சதியோ?...
காரமற்றுப் போனது
காத்திரமான காதல் உள்ளம் இரண்டு!....

காதல் என்ற பெயரால்
காயப் பட்டு காலம்
கழிக்கிறேன்!.....
சொந்தமென்று சொல்லிக் கொள்ள
இப்போதெல்லாம் உள்ளதேன்னவோ
பாழாய்ப் போன அந்த
காதல் நினைவுகள் தான்!.....

அப்போ நான் வரட்டா!...

உங்கள் நண்பன்

அபூ......

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

காத்திருப்புகாற்று மரணித்த பொழுதுகளில்
மறவாமல் வழி மேல்
விழி வைத்தேன்!....

மெளனமான வீணையின்
மொழி அறியாமல்
ராகம் இசைத்தேன்!....

பாலைவனத்து
கள்ளி இலையை
கிள்ளி எடுத்து
வாசனை நுகர்ந்தேன்!.....

நீ நடக்கும் தெருவோர
மருங்குகளில் ரோஜா இதழ் கொண்டு
கம்பளம் விரித்தேன்!....

குயிலின் குரலை விட
இனிதாய் என் குரலை
விழுமியப் படுத்தினேன்!...

உன் பாதச் சுவடுகள் வரைய
அந்த "லியானோ " வின்
முகவரி தேடினேன்!....

என் கவிதை வரிகளை
விஞ்சி நின்ற வைர முத்து
வரிகளைத் தான்
நீ ரசிக்கிறாய் என்றால்
அதற்காகவே வைரமுத்துவின்
பக்கங்களைப் புரட்டினேன்!.....

அமர்தலில் கூட உனக்கு
தனி சுகம் இருப்பதால்
எனக்கும், உனக்குமாய்
தனித் தனி இருக்கைகளை
தயார் செய்தேன்!..

இத்தனையும் ஆன பின்னால்
இதழோரப் புன்னகையை
இரவல் எடுத்துக் கொண்டு
எங்கே நீ சென்றாய்?

வேண்டாம் பெண்ணே!.....
காதலில் காயப் பட்ட
ஆண் மனது உன்னை
ஆண்டுகள் சென்றாலும்
ஆட்டிப் படைக்கும்!....

ஆதலால் கண்ணே!....
ஆசையோடு எதிர் பார்க்கும்
ஆண்மையை நாடி
அன்போடு வந்து விடு!...
ஆவலோடு காத்திருக்கிறேன்!...

எதிர் பார்ப்புக்களுடன்....

உங்கள் நண்பன்

அபூ.......

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

விருந்தாகும் விருதுகள்தொடர்ந்தும் அடிக்கடி சந்தோஷங்களை சந்திப்பதில் எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சி. ஏனெனில் பதிவு உலகுக்கு வந்து சிறிது காலத்தில் 3 வது விருது பெற்றிருக்கிறேன். எல்லோரும் வாங்கும் விருது தானே என்று நான் இதை கருத மாட்டேன். ஏனெனில் எனது எழுத்துத் துறை அனுபவத்தில் ஏதோ சின்னதாய் ஒரு வளர்ச்சி இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் அவர்கள் விருந்தாய் அளிக்கும் அந்த விருதுகளை மிகவும் சந்தோஷமாய் நான் ஏற்றுக் கொள்கிறேன்....

அந்த வகையில் நண்பர் குறை ஒன்றும் இல்லை எனக்கு ஒரு விருது வழங்கியுள்ளார். ரொம்ப நன்றி நண்பரே. எனவே அந்த விருதை நான் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. அதை இன்னும் 10 பேருக்கு வழங்க வேண்டும். அந்த இடத்தில் தான் கொஞ்சம் தள்ளாடுகிறேன். ஏனெனில் பதிவுலகத்தில் இருக்கும் அத்தனை பேரினது ஆக்கங்களும் ஏதோ ஒரு வகையில் உள்ளத்தை தொடுகிறது. எனவே பெரும் சங்கடத்துக்கு மத்தியில் நானும் 10 பேரைத் தெரிவு செய்து இந்த விருதினை அளிக்கிறேன். அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள்.

நன்றி நண்பா குறை ஒன்றும் இல்லை...1. லோஷன்

2. யோ வாய்ஸ்

3. ரமணன்

4. மனவிலாசம் (S. A. நவாசுதீன் )

5. நிலாமதி

6. ஹிஷாம் முஹம்மத்

7. ஹேமா

8. சுமஜ்லா

9. மனவிழி (சத்ரியன்)

10. என் இனிய இல்லம்

நான் அடிக்கடி சென்று வரும் வலைப் பதிவாளர்களுக்குத் தான் இன்றைய விருதினை வழங்கியிருக்கிறேன். அனவே அவர்கள் சந்தோஷத்தோடு அதனை ஏற்றுக் கொண்டு இன்னும் 10 பேருக்கு அதனை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

அப்போ நான் வரட்டா.....

உங்கள் நண்பன்

அபூ.....

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

வா.... ரமழானே வா!......அலைகளாய் வீசிய உணர்வுகள்
அப்படியே அடைக்கலம் பெறட்டும்
அமைதியான அந்தி பொழுதில்
அழகான தலைப் பிறை பார்த்து!.....

ஏழையின் பசியை
ஏறெடுத்துப் பார்க்காதவர்கள்
ஏக்கத்தோடு உணர
ஏகனால் பரிசளிக்கப் பட்ட நோன்பே வா!....

பதினொரு மாதங்கள்
பருத்தியாய் பறந்தனர்
பகுத்தறிவு இருந்தும், இல்லாதவர்களாய்...
பதில் சொல்ல வரும் ரமழானே நீ வா!.....

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து
இனிய நோன்பு அதில் நான்கு
இன்சுவை பெற வேண்டும் நாம் நோற்று
இருள் நோக்கும் ரமழானே வா!....

ஆயிரம் மாதங்களை விடச்
சிறந்த ஓர் இரவு....
ஆசையோடு எதிர் பார்க்க வைக்கும்
ஓர் ஒற்றை நாள் இரவு.....
இனிய ரமழானே உன்னிடம்!.....
அதனால் நீ வா!......

பகல் முழுதும் நோன்பு நோற்று
இரவு முழுதும் நின்று வணங்கி,
இறைவனிடம் கெஞ்ச வேண்டும்
விஞ்சி நின்ற எம் பாவங்களை
போக்க வேண்டி!.....
வா.... ரமழானே வா!.....

தவறுக்கும், மறதிக்கும்
மத்தியில் படைக்கப் பட்ட
மனித இனம் மன்றாட வேண்டும்
மகத்தான இறைவனிடம் !......
வா...... ரமழானே வா.....

நரக வாயில்கள் பூட்டிடப்பட்டு
சுவன வாயில்கள் சுகந்தம் பெரும்
நாட்களைக் கொண்ட ரமழானே!....
நீ வா!......

செல்வந்தர்கள் சுக போகம் வாழ
செல்வச் செழிப்புக்கள்
விகிதாசார அடிப்படையில்
சென்றடைகிறது -
சொல்லொனாத் துயரடையும்
ஏழைகள் கரங்களில்
"ஸகாத்" எனும் பெயரில்!....
எனவே நீ வா ரமழானே!......

முப்பது நோன்பு
முகம் மலர்ந்து நோற்று
முறுவல் பூத்து
"முஸாபஹா" செய்யும்
ஈகைத் திருநாளைக் கொண்டு வரும்
ரமழானே நீ வா!.....

உன் வருகையை
இன் முகத்தோடு எதிர் பார்க்கிறோம்!...
வா..... ரமழானே வா......

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

அவன் ஒரு அறிவிப்பாளன்பூப் பூக்கையில் அதற்கு
பல அர்த்தம் சொல்கிறான்....
அதை மலர்களும் உணர்கிறது,
மனிதனும் உணர்கிறான்!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

ராகம் இசைக்கும்
காலைப் பொழுதில்
ராகம் இன்றி ராகம் இசைக்கிறான்
வாய் திறந்து வெறும் வார்த்தைகளால்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!...வினோதமாய் வியூகிக்க
சில விடயங்களை விரித்து வைக்கிறான்!..
கிடைக்கும் சில விடயங்களை
சிறப்பாய் விமர்சனம் செய்கிறான்!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

பகற் பொழுதில்
பட்டினியால் வாடுவோர் கூட
உள் உணர்வுகளால் வாடக் கூடாது
என்பதற்காக பகற் பந்தி வைக்கிறான்!..
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....தேடல் என்பதை தேடித் தேடியே
கற்றதையும், அறிந்ததையும்
செவிப் புலன் வரை கொண்டு சேர்கிறான்!
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

எங்கேயும், எப்போதும்
என்றென்றுமே வேண்டும்
புன்னகை என்பதற்காய்
புன்னகையையும், சந்தோசத்தையும்
தனிமையிலே கொடுக்கிறான்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!...

நேற்றைய காற்றில்
இன்றைய நினைவுகள்
சிறகு விரித்து நிலாச்சோறு
உண்ண ஆசைப் பட்டால்????....
ஊட்டி விடுகிறானே அவன்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....விடிய விடிய விழித்திருந்தாலும்
விருட்சம் கொடுத்து
விடியும் வரை விழியோடு
கதை பேசி....
விடியலுக்கு வெற்றி கொடுக்கிறான்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

உருவாகும் கற்பனைகளுக்கு
அவனது உமிழ்நீரும் உரமாகும்!...
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

கனவோடு வாழ்ந்தவன்
கதை பேசுகிறான்
கவிதையும் பாடுகிறான்!..
அத்தனையும் மற்றவர்கள்
சந்தோசத்துக்காக வேண்டி!....
ஏனெனில் அவன் ஒரு அறிவிப்பாளன்!....

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்

அபூ....

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

தனிமை எனும் விதி....
தனிமை தான் வாழ்க்கையின்
அர்த்தங்களை உணர்த்திச் செல்கின்றன!...

உன்னைப் போல் தான் நானும்
உற்றம் இழந்து இன்று
தனிமைப் பட்டிருக்கிறேன்!....

என்றோ ஓர் நாள்
நானும் ஒரு ரோஜாவாய்
கண்ணில் தென் பட்டால்
தலையில் ஏறி உட்கார்ந்திருப்பேன்!...
மறுகனம் வாடிவிட்டால்
பலர் கால்களால்
பதம் பார்க்கப் படுவேன்!....

இது தான் உற்றம் இழந்து
தனிமைப் பட்டிருக்கும்
உனதும், எனதும் விதி!.......

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

ஆறாத வடுக்கள்


நிசப்த இரவுகளில்
ஏன் நான் மட்டும் அழ வேண்டும்?.
எல்லோரையும் போல் தானே
எனக்கும் எல்லாம் இருக்கிறது!..
பிறகு ஏன் ஒதுக்கி வைத்தார்கள்?....

குடும்பம் குதூகலம் இல்லாமல்
ஒதுக்கி வைத்தது சில காலம்!.....
நண்பர்கள் நட்பு வேண்டாமென
தள்ளி வைத்ததும் சில காலம்!.....
அப்போதெல்லாம் நான் யோசிக்கவில்லை.!
ஏன் இவர்கள் இப்படி
தள்ளி வைக்கிறார்கள் என்று?...

வேண்டாமென அவர்கள் கெஞ்சியும்
வேண்டுமென அடம் பிடித்தேன்
அன்புக்கு இலக்கணம் அறிந்து
அடைக்கலம் பெறுவதற்கு!....

அன்பை விலை கொடுத்தாவது
வாங்க முடியுமா?...
தினம் தினம் காணும்
இதயங்களிடமெல்லாம்
விலை பேசினேன்!....
காட்சிப் படுத்தப் பட்ட
பொருட்களுக்கு நிரம்பல் இல்லை
என்பதை அறியாமல்!.....

"ஏழையாய் வாழ்ந்தாலும்
கோழையாய் வாழாதே"
எங்கோ கேட்ட ஞாபகம்
பிறகு ஏன் கோழையாகி
அன்பை விலை பேச வேண்டும்?....

அழகு, அறிவு, அந்தஸ்து
இதைப் பார்த்துத் தானா அன்பு வரும்?
மன்னிக்க வேண்டும்.....
அழகு என்பது என் அகமதைத் தவிர
புறமெங்கும் இல்லை.....
அறிவு ஏதோ இறைவன் புண்ணியம்....
அந்தஸ்து என்பது அடுத்த வீட்டுக் காரன்
அடுக்கு மாடி கூட
வர்த்தக மையம் தான்!,,,,

மூங்கிலில்லா காட்டில்
முருங்கையைக் கொண்டா
புல்லாங்குழல் செய்வது?
முடியாத காரியம்
என்பதால் தானே
வாழ்க்கைக்கு புதிய
முகவரி கொடுக்க
கடல் கடந்தேன்!.....

நேசக் காற்று இல்லாததினால்
இப்போதெல்லாம் சோகக் காற்று தான்
வெற்றிடமான இதயத்தில்
இளைப்பாற வருகிறது!....

என்ன செய்ய?....
வாயால் வாதாடித் தான்
அன்பைப் பெற வேண்டும்
என்கிற அகராதியிலிருந்து
மாற்றப் பட்டு விட்டேன்!....

இருந்தாலும் மனதின்
ஆறாத வடுக்களுக்கு
யார் பதில் சொல்வது?....

(என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் கவிதையாய் உறுப் பெற்றிருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்....)

உங்கள் நண்பன்

அபூ.....

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

கண்டு பிடிச்சிட்டாங்கய்யா....

நாளுக்கு நாள் பெருகிவரும் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை அடுத்து அதை தயாரித்து தரும் நிறுவனங்களுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகிறது.

இதனால் தாங்கள் தயாரிக்கும் தொலைபேசிகளில் புதிய புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி பயனாளர்களை கவர வேண்டிய கட்டாயத்துக்கு தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இப்படி புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தென்கொரிய நிறுவனங்கள் தான் முதலிடத்தில் இருக்கின்றன.

அந்த வகையில் அண்மையில் தென்கொரிய நாட்டை சார்ந்த Samsung நிறுவனம் தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஒரு Mobile Phone ஐ சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

அதே போல் சூரிய ஒளியில் charge செய்யும் தொழில்நுட்பத்தை புகுத்தி ஒரு தொலைபேசியையும் அறிமுகப்படுத்தியது.அதே போல் இப்போது இருக்கும் TFT-LCD திரையின் அடுத்த கட்டமாக உள்ள AMOLED என்ற தொழில்நுட்பத்தை புகுத்தி Samsung Jet என்ற போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

இப்போது தென்கொரிய நாட்டை சேர்ந்த மற்றொரு நிறுவனமான LG நிறுவனம் மொபைல் திரையில் மிக உயர் ரக தொழில்நுட்பமாக முதல் முறையாக HD (HighDefinition) தொழில்நுட்பத்தை புகுத்தி "Chocolate BL40" என்ற பெயரில் ஒரு போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.கிட்டதட்ட LCD டிவிக்களில் பயன்படுத்தப்படும் இந்த HD தொழில்நுட்பம் முதமுறையாக மொபைல் போனில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் நாம் நமது மொபைல் போனில் LCD டிவியில் காட்சிகளை பார்ப்பது போன்ற ஒரு புதிய அனுபவத்தை பெறலாம்.

இன்னும் இந்திய சந்தையில் வராத இந்த போனின் விலை 38000/- என்ற குறியீட்டு விலைக்கு விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(இனி என்ன?... வளரும் தொழிநுட்பத்திற்கேட்ப நாமும் மாறிக் கொள்ள வேண்டியது தான். இருந்தாலும் விலை ரொம்ப ஓவராத் தான் இருக்குது இல்லையா?...)

(இன்றைய என் தேடலில் சிக்கிய ஒரு தொழிநுட்ப பதிவு இது......)

அப்போ நான் வரட்டா

உங்கள் நண்பன்....

அபூ.....

சனி, 8 ஆகஸ்ட், 2009

பொய் + அருமை

பொய்பொய் என்ற சொல்லையே பொய்யாக்கி
பொய்யை பொய்யெனச் சொல்லும்
பொய்யர்கள் இருக்கும் வரை
பொய் பொய் தான்!.......
**************************************


அருமைஅருமையான குணத்தை
அருமையில்லாதவன் கண்டு
அருமை எனச் சொன்னால்
அருமை எனும் சொல்லின் அருமை
அருமை இல்லாதவன் சொல்லில் தெரியும்!.....

உங்கள் நண்பன்

அபூ.....

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

காதல் மழை....


முகில்கள் சிந்தும்
கண்ணீரில் நான்
நனைகிறேன்!.....

நான் சிந்தும்
கண்ணீரில்
அவள் நனைகிறாள்.....

இது தான் காதல் மழையா?....

உங்கள் நண்பன்

அபூ.......

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

திருவிளையாடல் ஆரம்பம்....
ரொம்ப சந்தோஷத்தோடு இன்றைய பதிவை எழுத ஆரம்பிக்கிறேன். ஏனெனில் எழுத்துத் துறையில் நான் கால் எட்டி வைக்கும் முதல் ஏணிப் படி இது. சிறு வயதிலிருந்தே வாசிப்பு, பேச்சு, கவிதை, விவாதம், அறிவிப்பு, பாஓதல் என எல்லா நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்தோடு கலந்து கொள்ளும் நான் வலையுலகிற்கு கொஞ்சம் புதியவன். ஆரம்பத்தில் எழுத்துப் பிழைகளோடு தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த போது பின்னூட்டல் மூலம் கரம் கொடுத்து கரை சேர்த்தீர்கள். அதன் பலன் தான் இன்று என்னை அரைச் சதம் அடிக்க வைத்திருக்கிறது. ரொம்ப நன்றி அன்புள்ளங்களே.

ஒரு கலைஞன் வளர்கிறான் என்றால் ஆயிரம் சிறைச் சாலைகள் மூடப் படுவதற்கு ஒப்பாகும் என என் ஆசிரியர் அடிக்கடி என்னைப் பார்த்து சொல்லுவார். உண்மையில் சிலருக்கு திறமை இருக்கும். ஆனால் எழுத வராது. ஆனால் சிலருக்கு எழுத முடியும். அதை கற்பனை பண்ணி எழுத முடியாமல் தவிப்பார்கள். (இது நான் நிறைய பேரில் கண்ட உண்மை.) இப்படி போராடுபவர்களுக்கு மத்தியில் நான் கடுகு மணி அளவு பெறுமதியில் வலையுலகில் அரைச் சதம் அடிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த அளவுக்கு சிறிய திறமையை தந்த அந்த இறைவனுக்கு என்றும் நன்றியுடையவன் நான். மற்றப் படி என் நன்றிகளுக்கு உரித்தானவர்கள் தினம் தினம் என் வலைப் பூ வந்து நட்பைப் பரிமாறும் நட்புள்ளங்கள் நீங்கள் தான்.

இன்றைய தினம் நான் ஒரு உண்மையை கட்டாயம் உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும். நான் இப்போது கடல் கடந்து வெளிநாட்டில் Graphic Designer ஆக பணி புரிந்து கொண்டிருக்கிறேன் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில். வலைப் பூ ஆரம்பித்த காலத்தில் எல்லா வலைப் பூவையும் நான் பார்ப்பதுண்டு. குறிப்பாக அவர்களுடைய எழுத்தாற்றலை. ஆரம்பத்தில் பின்னூட்டல் இடுவதற்கு தயங்கினாலும், பிற்காலத்தில் பின்னூட்டங்களும் இட்டு வந்தேன். ஆனால் இப்போது சிறிது காலத்திற்கு நான் பின்னூட்டல் இட வேண்டுமானால் சிறிது போராட வேண்டி இருக்கிறது. காரணம் நான் இருக்கும் நாட்டில் இப்போது பாடசாலை விடுமுறை கொடுக்கப் பட்டிருக்கிறது. எனவே உயர் பதவிகள் வகிக்கும் சிலர் தன் குடும்பத்தோடு தாய் நாட்டுக்கு சென்று விட்டனர். அதனால் எனக்கு அவர்களில் ஒருவருடைய இடத்தை நிரப்ப வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே பாடசாலைக் காலங்களில் 1+1 கட்டாயம் 11 தான் வர வேண்டும் என அடம் பிடித்தவனை இப்போது கணக்கியல் வாட்டி வதைக்கிறது. இருந்தாலும் தன் நம்பிக்கையோடு எந்நாளும் முடியும் என தைரியம் எடுத்துக் கொண்டு அந்தப் பொறுப்பை செய்து வருகிறேன். எனவே அதில் பிழைகள் ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் இப்போது கொஞ்சம் வலைப் பூ மேய்வதைக் குறைத்துள்ளேன். ஆனால் சின்ன ஒரு இடை வேலை கிடைத்தால் போதும். அப்படியே சுற்றி அடித்து வந்து கொண்டே இருப்பேன். ஆனால் இன்னும் கொஞ்சம் இடை வேலைக்குப் பிறகு மீண்டும் ஆரம்பிப்பேன் என் மேய்தலை. அதுவரையில் நான் கட்டாயம் உங்கள் வலைப்பூ வருகிறேன். முடியுமான சந்தர்ப்பத்தில் பின்னூட்டலும் இடுகிறேன்.


இனி வலைப் பூவில் என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். விருதும் கொடுத்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் அத்தனை பேரும் நல்ல நண்பர்களாக என்னில் இடம் பிடித்து விட்டீர்கள். மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

நானும் இன்று ஒரு விருதினை என் தளத்திற்கு வந்த உங்களுக்காக வழங்கி வைக்கிறேன். இது உங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம். சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.
இனி என்ன அரைச் சதம் அடிச்சாச்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருவிளையாடலை ஆரம்பிப்பது தான் என் வேலை. நிச்சயம் கரம் கொடுத்து நிற்பீர்கள் எனும் நம்பிக்கையில் என்னுடைய ஐம்பதாவது பதிவை முடித்துக் கொள்கிறேன்.

நான் இந்த அளவு தூரத்துக்கு வெற்றி நடை போட்டு வருவதற்கு காரணமாய் இருந்த அந்த இறைவனுக்கும், அன்புள்ளங்கள் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் உரித்தாகட்டும்.

அப்போ நான் வரட்டா.....

உங்கள் நண்பன்

அபூ.......

(மீண்டும் சந்திப்போமா?.....)