திங்கள், 29 ஜூன், 2009

அது ஒரு காலம்....


முதன் முதலாக ஒரு தொடர் பதிவுக்கு அழைக்கப் பட்டிருக்கிறேன். அழைப்பு விடுத்த சிநேகிதனுக்கு நன்றி. தட்டுத் தடுமாறி எழுந்து நிற்க முயற்சிக்கின்ற போது அது பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைத்திருக்கின்றீர்கள். ஆனால் ஒரு செய்தியை கட்டாயம் சொல்லத் தான் வேண்டும். அது என்ன விடயம்னா நான் இப்போ இருக்கிற நிலைமையில் நேற்றைய நாள் என்ன நடந்தது என்பதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை. (தப்பாக நினைக்க வேண்டாம்.. அவ்வளவு வேலைப் பழு....ஹி.....ஹி.......). அதனால் சுவரோடு முட்டி மோதி சில நினைவுகளை மீட்டெடுத்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வாசித்து விட்டு கட்டாயம் கருத்து சொல்லிட்டு போங்க.....

தூரத்து நிலாக் காட்டி அம்மா சோறூட்ட நான் அடம்பிடித்த காலம் அது. கச்சான் கடலைக்காய் அக்காவும், அண்ணாவும் கொடுக்கும் முத்தங்களை ஆவலோடு எதிர் பார்க்கும் தருணம் அது. எல்லோரையும் போல் அன்பால் கட்டிப் போட அப்பா இல்லாத பொழுது அது. அந்த நேரத்திலெல்லாம் அம்மாவை கஷ்டப் படித்தியிருக்கிறேனா என்பது இன்னும் என்னில் ஒரு கேள்விக்குறி? என்னைப் பொறுத்த வரை எனக்காய் நான் கவலை பட்டதை விடவும், எனக்காய் நான் கஷ்டப் பட்டதை விடவும் என் தாய் தான் எல்லா விதத்திலும் எனக்காய் துன்பப் பட்டிருக்கிறாள். அவளுக்காய் நான் என்ன செய்தாலும் அவைகள் ஈடாகாது. தாயே... நீ நீடூழி வாழ வேண்டும் என்பது தான் என் ஆசை. நிச்சயம் இறைவன் என் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும்.




கண்டதை எல்லாம் எனக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற பேராசை அப்பொழுதே எனக்கு இருந்தது போலும். (பெண்களைத் தவிர..... ) எனது ஊருக்கு பக்கத்தில் இருக்கும் ஊரில் உள்ள பாடசாலையில் தான் என்னை சேர்க்க வேண்டும் என அடம் பிடித்தேன். வீட்டில் கடைக் குட்டி நான். (அதானுங்க செல்லப் புள்ள.......) எனவே நான் சொல்றத தடுப்பாங்களா அவங்க? இல்லன்னா தடுக்கத் தான் விடுவோமா? ....(இது இப்போது உள்ள ............. அது...) பாலர் பாடசாலைக்கு சின்னப் பையன் சேர்ந்துட்டான். (வேற யாருமில்ல...நான் தான்...). அம்மாவுக்கு அடுத்த அம்மாவை ஆசிரியையை காண்கிறேன் அழகிய அந்த பள்ளி வாழ்வில்.

ஓரிரண்டு நாட்கள் கழிய வீட்டில் போடும் செல்லக் கூத்துக்களை எல்லாம் அந்த வகுப்பறைக்குள் போடவும் ஆரம்பித்து விட்டோம். அதற்கு ஏற்றாற் போல் சில நண்பர்களும் அமைந்தனர். குறிப்பாக பென்சில் சண்டை, இறப்பர் சண்டை இவைகள் தான் வகுப்பறையை ஆட்டி வைக்கும் யுத்தங்கள். அதில் ஐயா (நான் தான் ) கொஞ்சம் முன்னாள் இருப்பார். (சண்டை போடுவதில் இருக்கிற இன்பம் வேறு எங்கேயும் இருக்காது என்கிற நம்பிக்கை ஒரு காலம் இருந்தது. அது இப்போ கொடி கட்டி பறந்து விட்டது. அதனால இப்போ நான் பயந்தான் கோழின்னு சொல்லுவேன்னு நினைத்திருப்பீங்களே.....சொல்லவே மாட்டேன்.......ஹி........ஹி.....)

அது ஒரு நாள். என் பக்கத்தில் இருக்கும் என் நண்பன் நான் எழுதும் போதெல்லாம் என் பென்சிலை தட்டி விடுவான். (அப்போதே என் முன்னேற்றத்தைப் பார்த்து அவனுக்கு பொறாமை ஆரம்பித்து விட்டது போல.......ஹி.....ஹி.....) நான் நிறைய முறை வேண்டாம் எனச் சொல்லியும் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே பண்ணிக் கொண்டிருந்தான். அப்போ பொதுவாக எல்லோரும் அணிவது கட்டைக் காற்சட்டை இல்லையா? எனக்கு எழுந்த கோபத்தில் கையில் இருந்த பென்சிலால் அவனது தொடையில் ஓங்கி குத்தி விட்டேன். கருமம் பிடித்த பென்சில் கூர் உள்ளே உடைந்து விட்டது. அதிலிருந்து வீசிய இரத்தத் துளியும், அவன் கண்களில் வடிந்த கண்ணீர் துளியும் இன்னும் என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கிறது. அன்று தான் இந்த சின்னத் தம்பி முதல் ரவுடியானது. (வேணாம்..... என்கிட்ட விளையாட்டு.....) அன்று ஆசிரியை கொடுத்த சில அறிவுரைகளும், அம்மா வடித்த சில கண்ணீர் துளிகளும் தான் என் பள்ளி வாழ்வின் முதல் சாதனை என்று கூட சொல்லலாம். (பெரிய சாதனை படைத்துட்டாருன்னு சொல்லி திட்டாதீங்க....... அது அறியாத பருவமில்லையா??? இப்போ கூட சின்ன பையன் தான்.... ஆனால் நிறைய அனுபவப் பட்டும், அறிந்தும் வைத்திருக்கிறேன்.....அதனால இப்போதெல்லாம் வம்புச் சண்டைக்குப் போறதே இல்லீங்க.... ஆனா சண்டைன்னு வந்துட்டா?????........திருப்பாச்சி அரிவாள் தான்.....)




அடம் பிடிக்கிறது என்பது இன்னும் என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. பாலர் பாடசாலை ஆசிரியை காமிலாவிடமும் அடம் பிடித்து நிறைய முறை வெற்றி பெற்றிருக்கிறேன். ஒரு நாள் அவர் கொண்டு வந்த மரவள்ளிக் கிழங்கை எனக்கு தந்து விட்டு என்னுடைய சாப்பாட்டை எடுத்துக் கொள்ளுமாறு அடம் பிடித்தேன். அப்போதே இந்த agreement போடும் பழக்கம். அதாவது உங்க கிழங்கில் ஒரு துண்டாவது நான் உங்களுக்கு தர மாட்டேன் என்று சொல்லி விட்டு அந்த கிழங்கை கேட்டு அழுததை நினைத்து இப்போது சிரிக்கிறேன். (கொஞ்சம் சிரித்துக் கொள்றேங்க....ஹி........ஹி......ஹி.......) ஆனால் பாவம் அந்த ஆசிரியை எதுவும் சொல்லாமல் அப்படியே அந்தக் கிழங்குகளை தந்துட்டாங்க. பாவம் ஆசிரியை. (ஆனா அவங்க ரொம்ப நல்லா சாப்பிடுவாங்க போல.... ஏன்னு கேட்கிறீங்களா அவங்க ஒரு நேரம் சாப்பிடுற அந்தக் கிழங்கை நான் பிரிட்ஜ்ல வைத்து நாளுக்கு மேல் சாப்பிட்டு இருக்கிறேன்......)

காலங்கள் ஓட முதலாம் தரத்திற்காய் அனுமதித்து விட்டார்கள். அங்கே மற்றுமொரு ஆசிரியத் தாய் Niloofa. தரம் 5 வரை அவர் தான் வகுப்பாசிரியை. அவங்க ரொம்ப பாவம்க. அவங்க குழந்தைகள் கூட அவங்கள இந்தளவு கஷ்டப் படுத்தி இருக்க மாட்டாங்க. ஆனால் நான்?????/............. சொல்ல முடியல. ரொம்ப கவலையாக இருக்குது.

6 ம் தரத்திற்கு சென்ற பின் என்னிடம் இருந்த அந்த திடுவர்னு சொல்லுவாங்க இல்லையா? அதை எல்லாம் முடிந்த அளவு குறைத்துக் கொண்டேன். ஏனெனில் படிப்பில் அக்கறை காட்ட ஆரம்பித்து விட்டேன். அதனால் ஆசிரியர்கள் அவஸ்தைப் பட்டது குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் 6 ம் தரத்திலிருந்தே என் கலைப் பயணம் ஆரம்பித்து விட்டதால் ஆசிரியர்கள் நண்பர்களாய் மாறி விட்டார்கள். Beevi ஆசிரியை, Rifaya ஆசிரியை, Salam ஆசிரியர், Naima ஆசிரியை, Riswana ஆசிரியை, Faarik ஆசிரியர், நவாஸ் ஆசிரியர், அப்புறம் என் தாய் மாமா மார்களான Rauff ஆசிரியர், Hashim ஆசிரியர் அத்தனை பேருமே எனக்கு என் கலைப் பயணத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த நண்பர்கள். (நண்பர்கள்னு சொன்னதால கோபம் கொள்ளாதீங்க..... அந்த அளவுக்கு நமக்குள் நாமாய் விட்டோம்......)
எனவே இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் எழுதுவதானால் நான் வாழும் காலங்கள் போதாது. இவர்களுக்கு சொல்ல முடிந்ததெல்லாம் என்னை உருவாக்கியது போல இன்னும் நிறைய நல்ல உள்ளங்களை உருவாக்கி விடுங்கள். நிச்சயம் நாம் வாழும் காலம் முழுக்க உங்களுக்காய் பிரார்த்தித்துக் கொண்டிருப்போம். நாம் வாழ்ந்து மடிந்து விட்டால் எம் சந்ததியிடம் சொல்லி வைப்போம் உங்களுக்காய் பிரார்த்திக்க சொல்லி....

ஒருவாறு முடித்து விட்டேன் பழைய பல்லவி பாடி. இந்தப் பதிவுக்காய் என்னை அழைத்தமைக்கு சிநேகிதனுக்கு மீண்டும் நன்றிங்கோ.... (அது சரி, போட்டி விதி முறைய நான் மீறவில்லை. தவறி மீறியதா சொன்னீங்க..... பாலர் பாடசாலை, பன்சில், மறக்க மாட்டீங்க தானே....... அதனால எல்லோருமா சேர்ந்து கருத்த சொல்லிட்டு போங்க.. மீண்டும் சொல்றேன் பென்சில் தூக்க மாட்டேன்.....மீறித் தூக்கிட்டேன்........ஹி.....ஹி.....என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுங்க............ )

இப்போ நான் யாரை எல்லாம் இந்தத் தொடர் பதிவுக்கு அழைக்கப் போகிறேன் என்றால்....

ஹிஷாம் முஹம்மத்


பிரபா

சந்ரு

தொடர்ந்து இவங்க எழுதுவாங்க.......(சாரி, நான் ரொம்ப சுருக்கமாக எழுதி விட்டேன். நான் அழைத்த இவங்க ரொம்ப நன்றாக, விரிவாக எழுதுவாங்க.......)

அப்போ நான் வரட்டா.....

உங்கள் நண்பன்

அபூ.......