வியாழன், 30 ஜூலை, 2009

வலைப்பூ....




வரும் எண்ணங்களுக்கு
வர்ணம் தீட்டி
வடிவம் கொடுத்து
வரைந்திடும் பொழுதுகளில்
வளம் வருபவர்கள்
வஞ்சமில்லா நெஞ்சின்
வளமான கருத்துக்களை
வசந்தமாய் பதித்திடுகின்றனர்........

வரம் கேட்டு
வந்தார்ப் போல
வசீகரப் படுத்தி விடுகிறது
வந்தவர்களின் கருத்துக்கள்.......

வழுக்களில்லாமல்
வதக்கியும் விடுகின்றனர்,
வருத்தும் வைக்கின்றனர்,
வருத்தமும் கொடுக்கின்றனர்
வலையுலகம் தனில்.......

வண்டியின் சத்தமும்,
வண்டின் ரீங்காரமும்
வர்ணனையாகும்
வலையுலகம் தனில்......

வண்ணத்துப் பூச்சி விருது,
வலைப்பூ விருது,
வழங்கி கெளரவிப்பதால்
வன்முறைகளும் இல்லை இங்கு.....

வலக்கரம் கொடுத்து
வளரும் கலைஞர்களை
வரவேற்கும் வலைப்பூ
வருடங்கள் பல கழிந்தாலும்
வரட்சியில்லாமல்
வசீகரம் பெற வேண்டும்
வணங்கி நிற்கிறேன் இறைவனை.....


உங்கள் நண்பன்

அபூ.....

செவ்வாய், 28 ஜூலை, 2009

மைக்கேல் ஜாக்சனின் மகன்



அமெரிக்காவில் கடந்த மாதம் மரணம் அடைந்த பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு 3 குழந்தைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனால் அவர் மரணத்தின் பின் அந்த தகவல் சற்றே விரிந்து அவருக்கு நோர்வே நாட்டில் உமர்பட்டி என்ற 25 வயது மகன் ஒருவரும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக உமர்பட்டி அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சனின் நெவர்லேண்ட் பண்ணை வீட்டில் வசித்து வந்தவராம். மைக்கேல் ஜாக்சன் இறுதிச் சடங்கிலும் அவர் தான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தாராம்.

உமர்பட்டி மைக்கேல் ஜாக்சனின் மகன் என்று அவரைப் பற்றி கடந்த வாரம் பத்திரிகைகளில் தகவல் வெளியானது. இருப்பினும் மரபணு பரிசோதனை மூலம் அவர் மைக்கேல் ஜாக்சனின் வாரிசாக நிரூபிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில் லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு உமர் பட்டி தான் மைக்கேல் ஜாக்சனின் மகன் இல்லை என்று அறிவித்துள்ளார். மைக்கேல் ஜாக்சன் என் தந்தை அல்ல. நானும் அவரும் நெருக்கமாக, ஆத்மார்த்த நட்புடன் பழகினேன்.அவர் எனக்கு ஒரு நண்பராக இருந்தார்.மைக்கேல் ஜாக்சன் அடிக்கடி என்னை பார்த்து மகன் போல நினைக்கிறேன் என்று சொல்வார். அது எனக்கு கிடைத்த பெருமை. ஆனால் தேவை இல்லாமல் நான் மைக்கேல் ஜாக்சனின் மகன் என வதந்தியை பரப்பிவிட்டனர் சிலர்.

உண்மையான என் பெற்றோர் நோர்வே நாட்டில் இருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பன் என்ற முறையில்தான் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் நான் முதல் வரிசையில் இருந்தேன். அதில் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என உமர்பட்டி தெரிவித்துள்ளாராம்.


(சிலர் வாழும் போது பிரபல்யம் அடைகின்றனர், சிலர் இறந்தால் மட்டும் பேசப்படுவர், ஆனால் வேறு சிலரோ வாழும் போது போற்றப் பட்டு இறந்த பின் வெகுவாகப் பேசப் படுவர். பொறுத்திருந்து பார்ப்போம் உமர்பட்டி யாருடைய புதல்வர் என்கிற விடயத்தை. மரபணு பரிசோனை பண்ணத் தானே போறாங்க. பிறகென்ன.... உண்மை தானா தெரிய வருமில்லையா?...... )

அப்போ நான் வரட்டா.....

உங்கள் நண்பன்

அபூ......

சனி, 25 ஜூலை, 2009

பஞ்சமில்லா வாழ்வு




வஞ்சமில்லா பிஞ்சு நெஞ்சு
அஞ்சி, அஞ்சி செஞ்சுவதெல்லாம்
பஞ்சமில்லாமல் வாழத்தான்.....

இஞ்சென்ன, கஞ்சென்ன
நெஞ்சமதில் பாசத்தோடு
லஞ்சமில்லாமல் பகிர்ந்தால்
பஞ்சு மெத்தையில்
ஊஞ்சல் கட்டி தாலாட்டுவோம்.......

மஞ்சமதை விஞ்சி நின்றால்
தஞ்சம் புகுந்து
கெஞ்சக் கூட
அங்கமில்லாமல் அலைய விடுவோம்!......

(ஒரு சின்ன கவிக் கிறுக்கு. சித்திரமாக மாற்றித் தாருங்கள். அதாங்க பின்னூட்டல் இடுங்கன்னு சொல்றேன்..... தவறை தவறென சுட்டிக் காட்டுங்கள். நிறைவை நிறைவாக சொல்லுங்கள்......)

அப்போ நான் வரட்டா!.....

உங்கள் நண்பன்
அபூ.......

புதன், 22 ஜூலை, 2009

நான்கு வார்த்தை..




நாக்குத் தட்டித் தட்டி
நான்கு வார்த்தை பேசப் பழகியதெல்லாம்
நாணல் கொள்ளும்
நாயகிக்காகத் தான்!.....

நாடக மேடை ஏறாமல்
நாற்று மேடை வைக்காமல்
நாதஸ்வரம் இசைக்காமல்
நான்கே வார்த்தையில்
நாவடக்கி
நான் ரசிக்க வைத்தேனே!.....

நாராய் உரித்து,
நான்காய் கிழித்து,
நான்கே வார்த்தையில்
நாதியில்லாமல் அடக்கி வைத்தேனே!.....

நாளேடு தேடி,
நாற்காட்டி பார்த்து,
நாள் எண்ணி,
நாடியில் கை வைத்து
நான் வருவேனா என எதிர் பார்த்ததும்
நான்கே நான்கு வார்த்தைக்குத் தான்!.....

நாயகன் அறிய நினைப்பதெல்லாம்
நாணல் கொள்ளும் நங்கையை
நாக்குத் தட்டியே
நாசமாக மாற்றி வைத்த
நான்கே நான்கு வார்த்தையை!.....

நாளை ஒன்று இருந்தால்
நாடும் கடந்து சென்றால்
நாள் பார்த்து
நான்கு வார்த்தையும் வரும்...
நாவடக்கிக் காத்திருங்கள்
நான் சென்று வருகிறேன்!.....

(கவிக் கிறுக்கு பிடித்திருந்தாலும், பிடிக்கலைன்னாலும் கருத்து சொல்லிட்டு போங்க.... பிடிக்கிற மாதிரி என்ன.... இல்ல இல்ல கவி வரிய மாற்றிக் கொள்கிறேன்... ஓகே....)

வரட்டா....

உங்கள் நண்பன்

அபூ.....

திங்கள், 20 ஜூலை, 2009

கறியும், கருவும்


கடுகும்,
கறிவேப்பிலையும்,
கத்தரியும்,
கருகிக் கறியாகும் அடுப்பில்.....

கன்னியும்,
கற்பும்,
கருவறையும்,
கதறிச் சிதைவடையும் கயவனிடத்தில்......

அபூ.....

சனி, 18 ஜூலை, 2009

ஏழையின் வாழ்வினிலே....



புண் முறுவல் பூத்ததில்லை
புது யுகம் காண முடியாததால்!...

புது வருடம் கொண்டாடியதில்லை
புரட்சிகள் எதுவும் படைக்க முடியாததால்!....

புத்தாடை அணிந்ததில்லை
புகையோடே தினமும் பொசுங்கிப் போவதால்!....

புது முகங்கள் அறிமுகமாகியதில்லை
புதுமை முகத்தில் இல்லாததினால்!.....

புல்லாங் குழல் வாசித்ததில்லை
புரிந்து கொள்ள முடியாததினால்!...

புல் வெளியில் கிடந்து உருண்டதில்லை
புயலோடே அனுதினமும் முட்டி மோதுவதால்!....

புத்தி கூட எனக்கில்லை
புத்தகங்கள் புரட்டாததினால்!.....

புரட்டிப் பார்க்க முடியவில்லை
புண்ணியம் செய்து கொண்டிருக்கிறேன்
புது மனை புகும் - என் எஜமான் வீட்டு
புது மனத் தம்பதியினருக்காய்.....

புரிந்து கொள்ளவே மாட்டார்களா?.....
புயலாய் மாறி,
புருவம் விரித்து,
புன்னகை இழந்து - பணி
புரிவதெல்லாம்
புற்றுக்குள் அடை பட்டு
புது விடிவு காண
புழுவாய் துடிக்கும் என் உறவுகளுக்காய் என்பதை!......

(எப்படி இருந்தது கவிக் கிறுக்கு?... உங்கள் கருத்துக்களை கொட்டி விட்டு போங்க. தவறை தவறாய் சொல்லுங்க. நிறைவை நிறைவாய் சொல்லுங்க....)

அப்போ நான் வரட்டா!....

உங்கள் நண்பன்

அபூ........

செவ்வாய், 14 ஜூலை, 2009

செல்லாக் காசு...




செந்தமிழும் நாப் பழக்கம்
செருப்படியும் கை வழக்கம்
செக்கச் சிவந்த பெண் ஒழுக்கம்..

செதுக்கிய சிலையாய் இருந்தவனை
செல்லாக் காசாக்கி விட்டாள்...
செம்பருத்தியாய் இதழ் விரித்தவனை
செருப்படியில் பதம் பார்த்தாள்....

செவிகளுக்கே விருந்தூட்டியவனை
செக்கனடிப்படையில்
செல்லில் பேசியே
செவிடனாக்கி விட்டாள்.....

செல்வத்தோடு வாழ்ந்த போது
செல்லமே என்று நெருங்கினாள்
செழிப்பு இழந்த போது
செந்திலே என்று ஒதுங்கி விட்டாள்.....

(இன்றைய சின்ன கிறுக்கல் இது.... பிடித்திருந்தா கருத்து சொல்லிட்டு போங்க... அப்போ பிடிக்கலைன்னா?...... அதையும் சொல்லிட்டுப் போங்க.... ஏற்றுக் கொள்கிறேன்...)

உங்கள் நண்பன்

அபூ....

திங்கள், 13 ஜூலை, 2009

நடிகர் சங்கத் தலைவரின் நம்பிக்கை


ஒவ்வொரு முறை நடிகர் சங்கம் தொடர்பான எந்த விழா அறிவிப்பாக இருந்தாலும், ரஜினி கலந்து கொள்வாரா என்ற கேள்வி பரவலாக பேசப் படுவது வழக்கம். அதே போல் தானாம் இம்முறையும் கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கிறதாம் பத்திரிகையாளர்களிடமிருந்து. அவர்களது கேள்விகளுக்கு மழுப்பல் பதில் எதுவும் கொடுக்காமல் அழுத்தலாக ரஜினி கலந்து கொள்வார் என பதில் கொடுத்து ஆர்வத்தைக் கூட்டியிருக்கிறாராம் நடிகர் சங்க தலைவர் சரத்குமார்.

நடிகர் சங்க வரலாற்றிலேயே முதன்முறையாக போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப் படுவது இதுவே முதல்முறை. இந்த தகவலை நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த பல விஷயங்கள் குறித்து ஆணித்தரமாக பதில் அளித்தார் அவர். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி இம்முறை முழுமையாக நிறைவேற்றப்படும். சினிமாவுக்கு நாடகம்தான் அடிப்படை. தெருக்கூத்திலிருந்து நாடகம், நாடகத்திலிருந்து சினிமா. சினிமாவிலிருந்து டி.வி. இப்போது மீண்டும் நாடகம் என்று சுழற்சி நடைபெறுகிறது. அதை வலியுறுத்தும் வகையில் ஆகஸ்ட் 15 ந் தேதி முதல், 23 ந் தேதி வரை நாடக விழா நடைபெற உள்ளது என்றார் நடிகர் சங்க தலைவர்.



இந்த நாடக விழாவிற்கு தலைமை ஏற்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. (நல்ல சிறப்பா அமையும் என்கிறது என்னோட நம்பிக்கை... )

அப்போ நான் வரட்டா!.....

உங்கள் நண்பன்

அபூ......

(வந்ததும் தான் வந்தீங்க.... மனதைத் திறந்து உங்க கருத்த சொல்லிட்டுப் போங்க.....)

ஞாயிறு, 12 ஜூலை, 2009

சிம்புவின் ஏக்கம்!....


போனால் போகட்டும் போடிங்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் சிம்பு. (ஏன் இதுன்னு யோசிக்கிறீங்களா?.....) இது போடா போடி பற்றிய முடிவுதான். இந்தத் திரைப் படத்தில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட வரலட்சுமி, இப்போது வராத லட்சுமியாகி விட்டாராம். ஏன்னா, இந்த படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டாராம். மம்மா மியா ஷோவுக்கு கிடைத்த வரவேற்பு, அவரை முற்றிலும் அந்த திசைக்கு திருப்பிவிட்டது. அதுமட்டுமல்ல, போடா போடி பற்றிய ஒரு தெளிவான முடிவு சிம்புவுக்கு இல்லாததும், எதை நம்பி, எப்போது கால்ஷீட் கொடுப்பது என்ற குழப்பமும் தான் வரலட்சுமியின் இந்த அதிரடிக்கு காரணமாம். (அட... அப்போ படம் கூட தெளிவில்லாமல் வரப் போகுதுன்னு சொல்லுங்க...)

இதற்கிடையில் அப்பா சரத்குமாரும், வரலட்சுமியின் சுதந்திரத்தில் குறுக்கே நிற்க விரும்பாததால், தைரியமாகவும், வெளிப்படையாகவும் சிம்புவிடம் சொல்லிவிட்டாராம் வரலட்சுமி. (ஓகோ..... அப்பா support போல....) இதற்கிடையில், சிம்புவின் பார்வை ஷாம்லி மீது விழுந்திருக்கிறது. போடா போடியில் வரலட்சுமிக்கு பதிலாக ஷாம்லியை நடிக்க வைக்கலாமே என்று நினைக்கிறாராம். (அப்போ... வாடி வா... ன்னு படத்துட பெயர மாற்ற சொல்லுங்க.... )

ஆனால் அவரோ சிம்பு படத்தில் மட்டுமல்ல, எந்தப் படத்தில் நடிக்கவும் இப்போது ஆர்வம் காட்டுவது குறைவாம். (ஒருவேள சம்பளப் பிரச்சினையோ யாரறிவார் இல்லையா?....) தெலுங்கில் இவர் நடித்த ஓய் ரிலீஸ் ஆகிவிட்டது. அங்கிருந்தே ஏராளமான அழைப்புகள் வருகிறதாம் ஷாம்லிக்கு. ஆனால், தெலுங்கு பட இயக்குனர்களுக்கும் உடனே ஓ.கே சொல்லாமல், தமிழ் பட இயக்குனர்களுக்கும் ஒரு முடிவை சொல்லாமல் காலம் கடத்துகிறார் ஷாம்லி. (பெண்ணானவள் இல்லையா? எப்போதுமே கொஞ்சம் யோசித்து, காக்க வைத்து தான் முடிவு சொல்லுவாங்க.... (அவங்க மட்டுமல்ல.... நம்ம பெண்கள் திலகமே அப்படி தானே.... லொள்.... )அவருக்கு நடிப்பின் மீதே ஆசை இல்லை என்றும் சொல்கிறார்கள். (இதை யாரு நம்பினாலும் நான் நம்பவே மாட்டேங்க..... நீங்களும் நம்பாதீங்க..... அபாண்டம்.... பொய்... )

விரும்பி கேட்பவர்களுக்கு ஷாம்லி தரப்போவது வரமா? துறவரமா? இது தான் இப்போது எல்லோருடைய ஏக்கமும்.... (முக்கியமா சிம்புவோட..... )

அப்போ நான் வரட்டா....

உங்கள் நண்பன்

அபூ....

(வந்ததும் தான் வந்தீங்க.... கட்டாயம் உங்க கருத்த சொல்லிட்டு போங்க. பக்குவமா அதனை ஏற்றுக் கொள்கிறேன். )

வெள்ளி, 10 ஜூலை, 2009

சில்லறைச் சிதறல்....



சிறைப் படுத்திய எண்ணங்களுக்கு
சிறகைக் கொடுத்து....
சிட்டாய் பறந்த
சிந்தனைகளை
சித்திரமாக்கி....
சில்லன வீசிய தென்றலில்
சிகரம் தொட்டு.....
சின்ன சின்ன லீலைகளில்
சில்மிசம் கண்டு.....
சிந்தும் சில துளிகளில்
சிலையாய் போனதெல்லாம்....
சில்லறையாய் நீ சிதறிய
சிரிப்பொலிகளுக்காகத் தான்......

புதன், 8 ஜூலை, 2009

இடம் மாறிய பறவைகள்....

மீண்டும் ஒரு கவிக் கிறுக்களோடு வலையுலக நண்பர்களை எல்லாம் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம்க. அது ஏனோ தெரியவில்லை. இப்போதெல்லாம் கிறுக்குவதற்கு ஆரம்பித்தாலே நினைவுக்கு வருவதெல்லாம் என் நண்பர்களின் காதல் தோல்விகளும், அவர்கள் படும் வேதனைகளும். (நல்ல வேளை....நான் இவற்றிலெல்லாம் மாட்டிக் கொண்டு காலத்தை வீணாக்கவில்லை.....) இந்தக் காதல் இருக்குதே ரொம்ப பொல்லாததுங்க.....நெருக்கமா அரவணைக்கும்....எங்கேயோ கொண்டு போய் செம சாத்து சாத்தும்க....(வேணாம்.....இதற்கு மேல நான் எதுவுமே சொல்லல்ல...) கிறுக்கல வாசிப்போமா?.........





என் ஜன்னல் கம்பிகளின் ஓரம்
நிலவு வந்த நேரம்
என் மனதில் ஏதோ பாரம்.......

நிலவோடு நீண்ட கதையாய்
நின் கதையை நான் கூற
நிலாக் கூட கண்ணீர் வடிக்கிறது
நிசப்த இரவுகளில்
நிதானமாய்.....

உன் நினைவுகள்
உள்ளத்தைக் குடைகையில் தான்
உளறி விட்டேன் உளக் குமுறல்களை
உறங்க மறுக்கும் தோழன் நிலவிடம்......

விடுதியின் வரலாற்றில்
விடியா இரவாய்
விருட்சம் பெறுகின்றனவாம்
விழி சிந்திய என் கண்ணீர் துளிகளும்
விட்டுக் கொடுக்கப் பட்ட என் காதல் நினைவுகளும்....

இரு ஜோடிப் புறாக்களாய்
இளம் தென்றலின் வேட்டையில்
இவனும், நீயும்
இடம் மாறிப் பறந்தது
இதயத்தை விட்டு இன்னும் மறையவில்லை......

ஒற்றையடிப் பாதையில்
ஒருவரை ஒருவர் கலாய்க்கும் போது
ஒளி கொடுத்த நட்சத்திரம் கூட
ஒப்பாரி வைக்கிறதாம் இப்போது......

முந்தானையை முறுக்கி
முடியை பின்னி
முகத்தை அலசி
முதுகைக் கிள்ளி - என்னை
முடுச்சுப் போட்டது எதற்காக? - உன்னை
முக்காடாய் போட்டுக் கொள்வதற்காகவா??

அறியாப் பாலகனாய்
அவரவரைப் போல வாழலாமென
அடம் பிடித்து வாழ்ந்தவனை
அடக்கி வைக்க வந்தாய்.....
அறியவில்லை இவ்வளவு
அவசரமாய் அடக்கி ஒடுக்கி வைப்பாய் என்று...

அறிந்து விட்டேன் இப்போது
அடங்காப் பிடாரி
அவணியிலும் இருப்பதை....
அழகு படுத்தி விட்டேன்
அசிங்கப் பட்ட என் காதலையும்
அழ நினைத்த என் அக நினைவுகளையும்.....


வாசித்து முடிச்சிட்டீங்களா? எப்படி இருந்தது என் நண்பர்களுக்கான என்னுடைய ஏக்கம்?...(இவருடைய அனுபவங்கள நண்பர்கள்ட மேல சாட்டி விட்டு தப்பிக்க பாக்குரார்னு தப்புக் கணக்கு மட்டும் போட்டுறாதீங்க நண்பர்களே....) கட்டாயம் கருத்து சொல்லிட்டுப் போங்க.... உங்க கருத்துக்கள் நிச்சயம் என் கற்பனையை இன்னும் தட்டி எழுப்பும்.....

(இதுவரை காலமும் பின்னூட்டல் இட்டவர்களுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்றேங்கோ....நீங்க கொடுத்த ஆர்வம் தான் கொஞ்சம் கொஞ்சமாய் உணர்வை தட்டி எழுப்புகிறது. தொடர்ந்தும் பின்னூட்டல் இடுங்க. குறையை குறையாய் சொல்லுங்க. நிறையை நிறைவாய் சொல்லுங்க..... ஏற்றுக் கொள்கிறேன்....)

அப்போ நான் வரட்டா

உங்கள் நண்பன்

அபூ......

திங்கள், 6 ஜூலை, 2009

இனிய திருமண வாழ்த்துக்கள்..

இன்று என் நண்பனின் அக்கா (எனக்கும் அக்கா தான் ) தன்னுடைய திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார். அவருக்கு வாழ்த்து சொல்லியே இன்று என் கிறுக்கல் கிறுக்கப் படுகிறது.




மருதாணி கோலம் போடட்டும்...
மனம் கவரும் ஆடை அணியட்டும்...
மணக்கும் மல்லிகை சூடட்டும்....
மஞ்சள் கயிறு ஏறட்டும்... ...
மணவாளன் கரம் கோர்க்கட்டும்...
மழலைகள் பல பெற்றேடுக்கட்டும்.....
மனைக்கு பெருமை சேர்க்கட்டும்....
மங்களம் வாழ்வில் பிறக்கட்டும்...
மகத்தான வாழ்த்துக்களும் கிட்டட்டும்.....

(லோகேஷ்....இன்று திருமண பந்தத்தில் இணையும் உங்கள் அக்காவுக்கு இனிய திருமண வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் என் நண்பர்கள் சார்பாகவும், என் தனிப்பட்ட வாழ்த்துக்களையும்....)

சனி, 4 ஜூலை, 2009

விம்மும் விடியல்கள்....

மீண்டும் ஒரு காகிதக் கிறுக்களோடு வலையுலக நண்பர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இப்போதெல்லாம் அதிகம் ஆசை கொள்கிறேன் வலையில் எழுதுவதற்கு. அத்தனைக்கும் நீங்கள் கொடுத்த உற்சாகம் தான் காரணம். உற்சாகம் கொடுத்த அனைவருக்கும் இதயம் திறந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்தும் பின்னூட்டல் இடுங்க. உற்சாகப் படுத்துங்க...

வழமை போல இன்றும் ஒரு சின்ன கிறுக்கலை கிறுக்கி வைக்கிறேன். சித்திரமாக அதை மாற்றிக் கொடுங்கள் அடியேனுக்கு. (அதாங்க பின்னூட்டல்......)





விரல்கள் வீணானதால்
விடியல்களும் விம்மத் தொடங்கின....
விருதுகளும் கை நழுவின......
விழுமியம் பெற நினைத்த
விடயங்களும் வினா குறியாகின......
விடை தெரியாத விடுகதைகளும்
விரக்தியளிக்கின்றன......
விழி மூடினால்
விலாசம் கேட்கின்றன - இத்தனையையும்
விட்டுக் கொடுக்க முடியவில்லை......
விடுதலை பெற்ற என் காதலைப் போல......
விரட்டியடிக்கவும் முடியவில்லை
விரட்டப் பட்ட என் காதலைப் போல.....
விடை பெற்றுக் கொள்கிறேன்.....
வில்லாய் மாறிய
விரல்களோடு........
விட்டு வைக்க நினைக்காதீர்கள்
விளையாட நினைக்கும் காதலையும்
விளையாட்டாய் நினைக்கும் காதலர்களையும்.....

(வாசித்து முடிச்சிட்டீங்க இல்லையா?.... பிடித்திருந்தாலும், பிடிக்கவில்லையானாலும் கருத்த சொல்லிட்டு போங்க தாராள மனப் பாங்கோடு..... ஏற்றுக் கொள்கிறேன்...)

அப்போ நான் வரட்டா!!....

உங்கள் நண்பன்

அபூ.....

புதன், 1 ஜூலை, 2009

மைக்கெல் ஜாக்சன் கனவுகள்..

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தி்ல் ரஹ்மானின் இசையை பார்த்து பிரமித்துப் போன ஜாக்சன் ரஹ்மானுடன் இணைய ஆர்வம் கொண்டாராம்.

இது தொடர்பாக A. R. ரஹ்மானின் நண்பர் ஒருவர் கூறுகையில், லாஸ் ஏஞ்சலெஸில் நடந்த ஆஸ்கர் விருது விழாவின்போது ஜாக்சனை சந்தித்தார் ரஹ்மான். அப்போது ரஹ்மானிடம் தனது அடுத்த ஆல்பத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஜாக்சன் கோரிக்கை விடுத்தார்.

இந்த ஆல்பத்தில் இந்திய உணர்வுகளை அதிகம் இடம் பெறச் செய்யவும் ஜாக்சன் திட்டமிட்டிருந்தார். இந்த ஆல்பம் தொடர்பாக அட்னான் சமியுடனும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததாகவும், இந்திய இசைக் கருவிகளான டொலக்கு, தபேலா, சாரங்கி ஆகியவற்றைப் பயன்படுத்தவும் ஜாக்சன் திட்டமிட்டிருந்தார்.

யுனிட்டி அன்தம் (unity anthem) என இந்த ஆல்பத்திற்கு பெயரிட்டிருந்தார் ஜாக்சன். ஏற்கனவே ஜாக்சனும், ரஹ்மானும் ஏகம் சத்யம் என்ற பெயரிலான இசை வடிவத்திற்காக இணைந்திருந்தார்கள்.



இந்திய இசைப் பக்கம் ஜாக்சனின் கவனத்தை திருப்பியவர்களில் முக்கியமானவர் ஜாக்சனின் அண்ணனான ஜெர்மைன் ஜாக்சன்தான்.

அது அப்படி இருக்க தனது வாழ் நாளில் ஒரு முறையாவது அன்னை தெரேசாவை சந்திக்க வேண்டும் என ஆசை வைத்திருந்தார் ஜாக்சன். ஆனால் அதுவும் கை கூடாமல் போய் விட்டது.

இதை விட முக்கியமான விடயம் தான் கடந்த சில ஆண்டுகளாக இந்து மதம் குறித்து ஆர்வம் கொண்டு அது தொடர்பான நூல்களை எல்லாம் தேடிக் கற்க ஆரம்பித்தாராம் ஜாக்சன்.

இதுகுறித்து சர்வதேச இந்து கழகம் என்ற அமைப்பின் தலைவர் ராஜன் செத் கூறுகையில், தியானம் செய்வது எப்படி என்பது குறித்து ஜாக்சன் படித்து வந்தார். மேலும் ஒரு சுத்த சைவமாகவும் ஜாக்சன் இருந்து வந்தார் எனத் தெரிவித்தார்.

தனது வாழ்நாளின் கடைசி நாட்களி்ல் ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை விரும்பிப் படித்து வந்தாராம் ஜாக்சன். தாகூரின் படைப்புகள் ஜாக்சனை வெகுவாக கவர்ந்து விட்டதாம். இதன் மூலம் இந்தியாவுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள அவர் ஆர்வம் காட்டி வந்தாராம்.

ஆனால் இயற்கை அன்னை அவரது வாழ் நாளை தனதாக்கிக் கொண்டது.

(ஜாக்சன் குடும்பத்திற்கு இசைக் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.....)

அப்போ நான் வரட்டா.......

உங்கள் நண்பன்
அபூ......