இப்போதெல்லாம் ஊடகங்களின் பெருக்கம் அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக வானொலி, தொலைகாட்சி சேவைகள். இந்த ஊடகங்களில் கடமையாற்றும் ஒலி/ ஒளிபரப்பாளர்களின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருப்பவர்கள் அவர்களுடைய நேயர்கள். நேயர்கள் கொடுக்கும் ஆதரவில் தான் அவர்களுடைய வெற்றியோ, நிகழ்ச்சியினுடைய வெற்றியோ தங்கி இருக்கிறது. தன்னுடைய குரல் வளம், தேடலின் வேகம், நிகழ்ச்சியில் புகுத்தும் புதுமைகள் தான் அந்த அறிவிப்பாளரை நேயர்கள் மத்தியில் மிளிரச் செய்கிறது. இப்படிப் பட்ட ஒலி / ஒளிபரப்பாளர்களுக்கு எனது வலைத் தளத்தினூடாக ஊக்கம் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. (நான் அறிவிப்பாளராக இருந்த காலத்தில் எனது நேயர்கள் எனக்கு கொடுத்த ஆர்வம், உற்சாகம் இதற்கு ஒரு சான்று ).





அவர்களது நிகழ்ச்சிகளை வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ, இணையத்திலோ கேட்டு விட்டு அந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு விமர்சனம் எழுதலாம் என எண்ணுகிறேன். (ஒரு காலத்தில் அறிவிப்பாளனாக இருந்த நான் இப்போது கடல் கடந்து இருப்பதால் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் நேயராக மாறி இருக்கிறேன்.) சூரியனின் முகாமையாளர் நவா அண்ணா அவருடைய ஒரு பதிவிலே இலங்கையைப் பொறுத்த வரையில் வானொலி அறிவிப்பாளர்கள் தான் நட்சத்திரங்கள் எனக் கூறி இருக்கிறார். எனவே சினிமாவைப் பார்த்து அந்த நட்சத்திரங்களையும், அவர்கள் படங்களை விமர்சிப்பதிலும் முந்தியடிக்கும் நாம் எமது நட்சத்திரங்களையும், அவர்களது நிகழ்ச்சிகளை விமர்சிப்பதிலும் ஏன் பின் நிற்கிறோம் என எண்ணிக் கொண்டு தான் இப்படியான ஒரு ஊகத்தை எடுத்திருக்கிறேன். நிச்சயம் இது அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு ஒரு நல்ல விமர்சனமாக இருக்கும். (அவரை எந்த வகையிலும் புண் படுத்துவது இதன் நோக்கமாக இருக்காது. மாறாக அவரை இன்னும் ஊக்கப் படுத்த வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்காக இருக்கும்... இதன் மூலம் வானொலி நிகழ்ச்சிகள் சில வேளை வெற்றி நடை போடலாம். இப்போதும் ஒரு சில நிகழ்ச்சிகள் வெற்றி நடை போடுகிறதை மறுக்க முடியாது. )
வலைத் தளத்தைப் பொறுத்த வரை இங்கே ஏராளமான ஒலி / ஒளிபரப்பாளர்கள் வெற்றி நடை போடுகின்றார்கள். அவர்கள் வழி தவறியேனும் என் தளத்திற்கு வர வாய்ப்புக் கிடைத்தால் சில வேளை அவர்களது நிகழ்ச்சி பற்றிய விமர்சனம் அவர்களது கண்ணுக்கு கிட்டலாம். எனவே இதன் மூலம் யாரோ ஒருவர் நம் நிகழ்ச்சியை அவதானித்துக் கொண்டிருக்கிறார் (விமர்சனத்துக்காக ) என்கிற சந்தோசம் பிறக்கும் இல்லையா?..... எனவே அவருக்கு இருக்கிற ஊக்கம், நம்பிக்கையை விட இன்னும் அதிகமாக சந்தோசம், தன்னம்பிக்கை பிரக்குமில்லையா? (இது என்னோட தனிப்பட்ட எண்ணம் மாத்திரமே....). எனவே தான் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.
இனி நீங்கள் தான் சொல்ல வேண்டும். நான் எடுத்து இருக்கும் இந்த புதிய முயற்சியை நீங்கள் வரவேற்கிறீர்களா? இப்படியான விமர்சனங்களை நீங்கள் எதிர் பார்க்குறீர்களா? உங்களுடைய எதிர் பார்ப்பையும், கருத்துக்களையும் பொறுத்துத் தான் தொடர்ந்து இந்த ஆக்கத்தினை எழுதுவதா? இல்லையா என முடிவு செய்யலாம் என்று இருக்கிறேன். எனவே பின்னூட்டல் மூல உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்.
மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.....
அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்!.....
அப்போ நான் வரட்டா
உங்கள் நண்பன்
அபூ..........