திங்கள், 11 மே, 2009

நான் காதல் கொண்ட அறிவிப்பாளர்கள்

பகுதி 1

அறிவிப்பாளர் பணி என்பது ஒரு மகத்தான பணி. அறிவிப்பாளராக எத்தனை பேர் அவா கொண்டாலும் அத்தனை பேருக்கும் அப்பணி கையில் கிட்டுவதில்லை. கிட்டிய அப்பணியை தன் மூச்சாய் கொண்டு நேயர்களை சந்தோசப் படுத்துவது தான் என்னைப் பொறுத்த வரையில் ஒரு நல்ல அறிவிப்பாளனுக்கான பண்பு. அப்படி வளர்ந்தவர்களில் என்னைக் கவர்ந்த, நான் காதல் கொண்ட, என்னை அறிவிப்பாளர் பயிற்சிக்கு க்குவித்த அந்த (காதலர்கள்னு சொன்னா தப்பில்லையே.....) அறிவிப்பாளர்களைப் பற்றி நான் அறிந்தவைகளையும் அவர்களின் நிகழ்ச்சிகளில் நான் ரசித்தவற்றையும் இன்றைய பதிவில் பதிகிறேன்....

(இதை எல்லாம் போய் நீங்க மொக்கைப் பதிவுன்னு சொன்னா I'm very sorry )

சரி, வாங்க அவங்க யாருன்னு சொல்லி பார்ப்போம்.

B. H. அப்துல் ஹமீத்

பொதுவாக பெயரிலேயே ஒரு வசீகரம். சின்ன வயசில் முதலில் ரசிக்க ஆரம்பித்த குரல்னு சொன்னா அது இந்த வசீகராவினுடைய குரல் தான். நான் இவரில் கற்றது ஏராளம். ஒரு நல்ல அறிவிப்பாளனுக்கான அத்தனை குணாதிசயங்களையும் நான் இவரில் கண்டிருக்கிறேன். தமிழைக் கொச்சைப் படுத்தாத இவர் இப்போது உலக அறிவிப்பளராய் மிளிரக் காரணம் இவருக்காக இவர் உருவாக்கிக் கொண்ட நிகழ்ச்சிகள். பொதுவாக "பாட்டுக்குப் பாட்டுன்னு " சொன்னா அது B. H. இப்படி இவரை அடையாளம் காட்டக் கூடிய நிகழ்ச்சிகளைத் தான் இவர் தெரிவு செய்து கொள்வார். மேலும் செவ்வி காணுதலும் இவருக்கு சாலப் பொருந்தும். ஒரு சாதாரண அறிவிப்பாளராய் இலங்கையில் அறிமுகமாகி இந்தியாவின் சினிமா வரை செல்வது என்பது இலகுவான விஷயம் இல்லீங்க. அந்த பெருமை அடைத்ந்திருக்கிறார் இந்த உலக அறிவிப்பாளன் B. H. இப்போது தென்னிந்திய தொலைக்காட்சியிலெல்லாம் ஆதிக்கம் செலுத்தும் இவர் நிச்சயம் அறிவிப்பாலர்களுக்கெல்லாம் ஒரு நல்ல முன் மாதிரி. நல்ல முன் உதாரணம். இவரது பணி தொடர இவரது தீவிர ரசிகனின் ( வேறு யாரும் இல்லீங்க நான் தான் ) வாழ்த்துக்கள்.

A. R. M. ஜிப்ரி

வானொலியில் மட்டுமே இவரது குரலை ரசித்த நான் 1996 ம் ஆண்டு எமது பாடசாலையில் நடந்த ஒரு கருத்தரங்கில் இவரை நேரடியாகக் கண்டேன். அப்போது தான் அறிந்து கொண்டேன் இவர் ஒரு அறிப்பாளர் மட்டுமல்ல ஆசானும் கூட என்பதை. "விரிந்தது உலகம். பரந்தது அறிவு. சிறந்தது செல்வம். செல்வங்களிலெல்லாம் உயர்ந்தது அறிவுச் செல்வம். அறிவினை முதலாய்க் கொண்டு புது உலகினை அலங்கரிக்க அணி வகுத்து நிற்கும் மாணவச் செல்வங்களின் எதிர் காலம் வலமாக வாழ்த்தி அரை மணி நேர அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சியை அரங்கேற்றி வைக்கிறேன். " இது அவர் பாணியில் அவர் உருவாக்கிக் கொண்ட அவர் வாக்கு. "அறிவுக் களஞ்சியம் ", "அல்லியின் ஹல்லோ உங்கள் விருப்பம் "...................இது போல ஏராளமான நிகழ்ச்சி. நிகழ்ச்சிகளின் பெயர் சொல்லும் போதெல்லாம் நினைவுக்கு வருவது அவர் குரலும் , நிகழ்ச்சிகளில் அவர் புகுத்தும் புதுமைகளும். உண்மையில் ஒரு நல்ல அறிவிப்பாளனுக்கான அத்தனை பண்புகளையும் நான் இவரிலும் கண்டிருக்கிறேன். இன்னுமொரு சந்தோசமான விஷயம் என்னான்னு சொன்னா அறிவிப்பாளர் துறை சம்பந்தமாக நான் இவரிடம் நேரடியாக (கருத்தரங்குகள் மூலம் ) நிறைய விடயங்களை கற்றிருக்கிறேன் என்பது தான். இவரது பணி தொடர வாழ்த்துக்கள்.

பரீன் அப்துல் காதர்

இவரைப் பற்றி நான் சொல்வதை விட இவர் நேயர்களுக்கு கூறும் வணக்கத்திலே இவர் இப்படி பட்டவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம். தென்றல் வானொலியில் "இசையும் கதையும் " நிகழ்ச்சியை நான் விடாமல் கேட்கிறேன் என்றால் அது பரீனின் குரலைக் கேட்பதுக்காகத் தான். நிச்சயமாக இவர்களெல்லாம் எங்களுக்கு மூத்த அறிவிப்பாளர்களாய் இருப்பதை இட்டு நான் மட்டுமல்ல இன்றைய தலைமுறையில் இருக்கின்ற அத்தனை அறிவிப்பாளர்களும் சந்தோசப் பட வேண்டியுள்ளது. (ஆனால் அடிக்கடி இவர் குரலை கேட்க முடியாதுள்ளது தான் மிகப் பெரிய கவலை. ) இவரது பணி தொடர வாழ்த்துக்கள்.

சனூஸ் முகம்மத் பெரோஸ்
இஸ்மாயில் B. மாரிப்
சத்வரூபவதி நாதன்
மயில்வாகனம் சர்வானந்தா
அபூ உபைதா மவ்ஜூத்.

இவர்கலயெல்லாம் சேர்த்து எழுதக் காரணம் செய்தி வாசிப்பதற்கென்றே உருவாக்கப் பட்டது போல இவர்களுடைய குரல் வளம். செய்தியை செய்திகளாகக் காதுகளில் போடுபவர்கள். இவர்களெல்லாம் பயிற்சி எடுத்து விட்டு கலையகம் சென்று செய்தி வாசிக்கிறவர்கள். (இப்போதைய generation ல் கலயகத்துக்குள் சென்று ஒலிவாங்கிக்கு முன்னாள் இருந்து கொச்சைத் தமிழில் திக்கித் திக்கி செய்தி வாசிப்பதனால் தான் சில அறிவிப்பாளர்களைப் பற்றி விமர்சனங்கள் வெளியாகிறது.) அவர்களுக்கெல்லாம் இவர்கள் சிறந்த முன்னோடிகள். "ஒரு முக்கியமான விஷயம். நான் சொன்னது தமிழைக் கொச்சைப் படுத்தும் கொச்சை அறிவிப்பாளர்களை. மாறாக எல்லா அறிவிப்பாளர்களையும் அல்ல"

(இந்த பதிவை தென்றல் வானொலியில் சத்வரூபவதி நாதனுடைய செய்தியைக் கேட்டுக் கொண்டு தான் பதிகிறேன் )

ரேலங்கி செல்வராஜா

ஏனோ வளரும் பயிரை முலையில் ஆணி வேரோடு பிடுங்கி விட்டார்கள். இருந்திருந்தால் அந்த கதிர் மூலம் நிறைய புதிர்கள் உருவாகியிருக்கும். ஆனால் இறைவன் விதியோ , யாரின் சதியோ , (நான் இதப் பற்றி எதுவுமே சொல்லல்ல , ஏன்னா நான் இலங்கையில இருக்கோனும் ) அவரது வாழ்வில் மரணம் முற்றுப் புள்ளி வைத்து விட்டது. நல்ல ஒரு அறிவிப்பாளினியை இழந்து விட்டது அவர் நேயர்களுக்கு பெரும் கவலை. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

நாகபூசணி கருப்பையா

நிகழ்ச்சிகளிலும் , செய்தியிலும் ஆரம்பத்திலிருந்தே தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார் இம்மணி. தென்றலில் இவர் குரலைக் கேட்கும் போதெல்லாம் அதில் ஒரு தனி இன்பம். பெண் அறிவிப்பாளர்களில் என்னைப் பொருத்த வரையில் தென்றலில் இவருக்கு தனி இடம். வாழ்த்துக்கள் அம்மா.

(இனி வாங்க நம்ம தலை முறையில இருக்கிற அந்த நான் ரசித்த என் காதலர்களைப் பற்றி சொல்றேன். பார்த்தும் தான் பார்த்தீங்க ............ கருத்த கொட்டிட்டு போங்க.......)

A. R. V. லோஷன்

இவர் ஷக்தி FM ல் அறிவிப்பாளராய் இருக்கும் போதே அப்பா........... மனசுல ரொம்ப நல்லா இடம் பிடிச்சிட்டார். சூரியன் FM ஐ அதிகமாகக் கேட்கும் நான் லோஷன் அண்ணா நிகழ்ச்சி படைக்கும் போது அந்தப் பக்கம் கொப்பு பாயும் பழக்கத்தைக் கொண்டிருந்தேன். காலப் போக்கில் லோஷன் அண்ணா நான் இப்படி tune பண்றத அறிந்தோ என்னமோ சூரியனுக்கு வந்துட்டாரு. இனி என்ன ? நம்ம இடம் இல்லையா? நிறைய நிகழ்ச்சிகள் இவர் படைத்தாலும் "மணி அடித்திட இசை ஒலித்திட இனித்திடும் இன்ப ராகமாய் வரும் சூரிய ராகங்களோடு இணைந்திருக்கிறீர்கள் " அப்பா..... எவ்வளவு speed ? இதுவே இவருக்கு ஒரு தனி இடத்தை உருவாக்கி விட்டது. காலப் போக்கில் நம்ம தள போல வரும் "அட்டகாசம் " சூப்பர். இவர் ஒரு விளையாட்டு வீரன் என்பதையும் நிரூபித்தது. ஆனால் கொஞ்ச நாள் மனதுக்கு பெரிய கஷ்டத்தை லோஷன் அண்ணா தந்தார். என்ன தெரியுமா? எந்த சதியோ சூரியனுக்கு காட்டியது டபாக்கூறு. சூரியனது அறிவிப்பாளர்களின் குரலைக் கேட்க முடியாமல் போனது எனக்கு மட்டுமெல்ல சூரியன் நேயர்கள் எல்லோருக்கும் கவலை தான். இருந்தாலும் சூரியன்னா சும்மாவா? திரும்ப உதயமாகி விட்டது. இருப்பினும் புதிதாய் உருவாகிய வெற்றி வானொலியில் லோஷன் அண்ணாவின் குரல் கேட்டு உண்மையில் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஏனெனில் ஒரு நல்ல அறிவிப்பாளனாய் இருந்தால் எந்த இடத்திலும் தனக்கென ஒரு ஆசனம் இருந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை தான். (இந்த நம்பிக்கை அறிவிப்பாளர் துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல. எல்லா துறையில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.) வாழ்த்துக்கள் அண்ணா.... (இப்போதெல்லாம் இணையத்தில் வெற்றிய கேட்க முடியுதில்லையே...... என்ன காரணம்னு சொல்லாமா பணிப்பாளர் அவர்களே! .....)

K. வியாசா, முகுந்தன்,

ஒரு காலத்தில் சூரியனில் வெற்றி நடை போட்ட இவர்கள் இப்போது முகவரி தெரியாமல் இருக்கிறார்கள். (எனக்கு மட்டுமல்ல என்று நினைக்கிறேன் ) தயவு செய்து இவர்களது விபரங்கள் தெரிந்த நீங்கள் கட்டாயம் என்கிட்ட சொல்லுங்க. ஆனா முகுந்தன் அண்ணா சூரியன்ல திரும்ப இருப்பதா தகவல் கிடைத்தாலும் ஊர்ஜிதம் இல்லாம இருக்குது. இத நான் நம்பலாமா? இருந்தாலும் நிகழ்ச்சி படைப்பதில் இருவரும் சூப்பர்...........
எங்கிருந்தாலும் வாழ்க!..........

அடுத்த பதிவில் மற்றைய அறிவிப்பாளர்கள் பற்றிய தகவல்களோடு சந்திப்பொம். அது வரையில் நல்லதய்யே சிந்திப்போம்.........

வரட்டா.......

அபூ.....

(வந்ததும் தான் வந்தீங்க ....... மனதுல இருக்கிற கருத்த சொல்லிட்டு போங்க......)

கருத்துகள் இல்லை: