சனி, 16 மே, 2009

நபி வழி!!!! ஒரு படிப்பினை.

"நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து தான் படைத்திருக்கிறோம். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் உங்களை கிளைகளாகவும் , கோத்திரங்களாகவும் ஆக்கினோம்." " நிச்சயமாக உங்களில் மிக கண்ணியவான் உங்களில் அதிகம் பயபக்தி உடையவரே. " (அல்குரான் )

ஏதோ எல்லோரும் எழுதுகிறார்களே....... நானும் எழுதலாமே........ என்றெல்லாம் போட்டி போட்டு என் பதிவை எழுதவில்லை. அப்படி எழுத வேண்டும் என்கிற தேவையும் எனக்கில்லை. ஏதோ ஒரு ஊடகவியலாளன் எனும் வகையில் தான் அறிந்ததையும், தேடித் படித்ததையும் (அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மாத்திரம் ) மற்றவர்களுக்குத் தெரியப் படுத்துவது கடமை. பொதுவாக எத்தனை மதம் இருந்தாலும் அத்தனை மதங்களின் அடிப்படையையும் எல்லோரும் அறிந்திருக்க வேண்டும், (அது ஒரு கடவுளே இல்லை, மார்க்கமே இல்லை என்கிறவரும் கூட )

ஆனால் மறுமை என்பது உண்மை. இதை எல்லா மதமும் சொல்கிறது. (ஆனால் சில அறிவு மிக்க முட்டாள்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. இது தான் அவர்களினுடைய தலை விதி. எம்மால் எதுவும் பண்ண முடியாது. இறைவன் தான் அவர்களுக்கு ஹிதாயத் (நேர்வழி ) காட்ட வேண்டும் )

பொதுவாக இஸ்லாத்தினுடைய அடிப்படையை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். ஒரே இறைவன் (ஏகத்துவம் ), என்கிற ஏகத்துவக் கொள்கை. இதனை அல்குரான், அல்-ஹதீஸ் மூலம் தெளிவு படுத்தியிருக்கிறான். அல்குரான் என்பது இறைவனுடைய வேத வாக்கு. இதனையே அல்குரானில் " சங்கை மிக்கதும், நேர் வழி காட்டக் கூடியதுமான அல்குரானை நாம் புனித ராமலானிலே இறக்கி வைத்தோம். " என சொல்லப் படுகிறது.

அதை செயல் ரூபமாகக் காட்ட இறைவன் மூலம் இறுதித் தூதராக அனுப்பப் பட்டவர் தான் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள். இதையே அல்குரானில் " நபியே! அகிலத்தாற்கு அருட்கொடையாகவே அன்றி நாம் உம்மை அனுப்பி வைக்கவில்லை " என இறைவன் சொல்கிறான். அல் ஹதீஸ் (சுன்னா ) என்பது நபியவர்கள் சொல்லியதும், நபியவர்கள் சொல்லியதாக சஹாபாக்கள் (நபித் தோழர்கள் ) சொல்லியதும். இதனையே அல்குரானில் "அவர் (நபி ) தன் மனோ இச்சைப் படி எதையும் பேச வில்லை. அவர் பேசியவை (சொல்லியவை ) அத்தனையும் அவருக்கு வஹியாக (இறைவனால் வானவர் மூலம் )" அருளப் பட்டவையே....."

எனவே! பொதுவாக இஸ்லாமியர்களுக்கு அல்குரானும், நபிவழியும் போதுமானது வாழ்கையை வெற்றி பாதையில் இட்டுச்செல்வதற்கு. மூதாதயறினுடைய பழக்கங்களைப் பார்த்து இப்படித் தான் இஸ்லாம் சொல்கிறது என்கிற மூட நம்பிக்கை கொண்டுள்ள மூடர்களுக்காக இந்தப் பதிவை தேடி பதிவிடுகிறேன். (எந்த மதமாக இருந்தாலும் நாம் அத்தனை பேரும் சகோதரர்கள். எனவே ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்வோமாக. )

நன்றி - Read Islam

அல்லாஹ்வின்மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்! ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: ஹாகிம்

நபி(ஸல்) அவர்கள் ஒரு நேரான கோடு கிழித்து இதுவே இறைவனின் நேரான ஒரே வழியாகும் என்றார்கள். பின்பு அக்கோட்டின் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் பல கோடுகள் கிழித்துவிட்டு "இவை பல வழிகளாகும். இவ்வனைத்து வழிகளிலும் ஷைத்தான் (இருந்து கொண்டு மக்களைத்) தன்பால் அழைப்பான்" என்று கூறிவிட்டு "நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்" ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம். அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்துவிடும். நீங்கள் நேர்வழியைப் பின்பற்றி பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான் என்று கூறி (6:153) என்ற வசனத்தையும் ஓதினார்கள்.


ஒருவன் நெருப்பு மூட்டுகிறான். அது சுற்றுப் புறங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. ஈசல்களும் வண்டுகளும் அந்நெருப்பில் விழ முனைகின்றன. இவனோ அவற்றை (நெருப்பில் விழாமல்) தடுத்துக் கொண்டிருக்கின்றான். எனினும் அவை அவனையும் மீறி நெருப்பில் விழுகின்றன. இம்மனிதன் எனக்கு உவமையாவான். நான் உங்களின் மடியைப் பிடித்து உங்களை நரகிற்குச் செல்ல விடாமல் தடுக்கிறேன். எனினும் நீங்கள் (எனது கட்டளைகளை மீறி) அதன் பக்கம் விழப்பார்க்கிறீர்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஒரு நாள் நடுப்பகலில் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது இரு நபர்கள் ஓர் இறைவசனத்தின் கருத்து வேறுபாடு பற்றி மிகவும் சப்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோபமுகத்தோடு வெளிப்பட்ட நபி(ஸல்) அவர்கள், "உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் இறைவேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டதனால் தான் அழிக்கப்பட்டார்கள்" என்றார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்து விட்டு அதைச் செய்யாமல் விட்டு விடவும் செய்யலாம் என அனுமதியும் அளித்தார்கள். ஒரு கூட்டத்தினர் அச்செயலை முழுமையாகவே விட்டு விட்டனர் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்ததும் பிரசங்கம் செய்யலானார்கள். அதில் இறைவனைப் புகழ்ந்து விட்டு "இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நிகழ்ந்து விட்டது! நான் செய்த செயலை விட்டும் முழுமையாகவே நீங்கி விட்டார்களே? அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களைவிட நானே இறைவனைப் பற்றி அதிகம் அறிந்தவனும் அவனுக்கு மிகவும் பயப்படுபவனுமாவேன்" என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது நிலத்தில் விழுந்த பெரும் மழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர். (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர். விவசாயம் செய்தனர்.

அந்த பெருமழை இன்னொரு வகை நிலத்தில் விழுந்தது. அது(ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகள் முளைக்கவிடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதரை ஏறிட்டுப் பார்க்காமலும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவருக்கும் உவமையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூமூஸா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

நிச்சயமாக பேச்சுகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நோவழியில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் நேர்வழியாகும். நிச்சயமாக மார்க்க விஷயங்களில் தீமையானது அவற்றில் புதிது புதிதாக உண்டாக்கப்பட்ட நவீன அனுஷ்டானங்களாகும். ஒவ்வொரு நவீன அனுஷ்டானங்களும் "வழிகேடாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம், நஸயீ


நன்றி - Read Islam

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்!!!, அது வரையில் நல்லதய்யே சிந்திப்போம்!!!!.........

உங்கள் சகோதரன்

அபூ........


வரட்டா!.......

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

மிகவும் அழகனாக விஷயங்களை தந்திருக்கிங்க. அருமை.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

Mrs.Faizakader
வலைக்குள் வந்தமைக்கு நன்றி.

"தெரிந்ததைச் சொல்வது நம் கடமையல்லவா? "

அடிக்கடி வலைக்குள் வந்து போங்கோவன் என்ன!..........(வந்தால் மட்டும் போதாது. சுடச் சுட கொட்டிட்டு போங்க.... வார்த்தைகள..............)